
– எம்.எஸ்.எம். ஸாகிர் –
நாட்டில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் – புதிய பள்ளிவாசல்களைப் பதிவு செய்கின்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கலாசார அமைச்சின் உத்தரவுக்கமைய – 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய பள்ளிவாசல்களைப் பதிவு செய்வதை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நிறுத்தியிருந்தது.
இந்த நிலையில் தற்போது புதிதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுள்ள எம்.எச்.ஏ.எம். றிப்லான், உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் மற்றும் இலங்கை வக்ப் சபையின் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. மத்தீன் ஆகியோர் இவ்விடயம் சம்பந்தமாக புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் செயலாளரோடு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி – பள்ளிவாசல்களின் பதிவை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
அதன் பிரகாரம் 01.08.2024 முதல் – பள்ளிவாசல்களின் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பதிவுச் சான்றிதழ்கள் – தபால் மூலம் அந்தந்த பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



