
நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் – ‘சமூக சேவையில் சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான ‘வர்த்தக உலக சர்வதேச விருது’ (Business World international Award – 2023) வழங்கும் விழா, நேற்று (17) கொழும்பு – தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற போது, முன்னாள் தவிசாளர் தாஹிருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
‘சமுதாயத்தில் சிறந்த தலைமைத்துவ விருது’ எனும் அடையாளத்துடன் வழங்கப்பட்ட இந்த கௌரவம், சமூக சேவையில் தாஹிரின் அர்ப்பணிப்புக்காக கிடைத்துள்ளது.
அரசியலில் களத்திலும், தனிப்பட்ட வகையிலும் மிக நீண்ட காலமாக சமூக சேவையில் ஈடுபட்டுவரும் தாஹிர், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராகவும் மூன்று தடவை பதவி வகித்து சமூகப்பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்த நாயக்க உள்ளிட்டோர இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கி வரும் Business World International Organization எனும் அமைப்பானது, 07 நாடுகளை உள்ளடக்கியதாக, வியாபார ரீதியில் சிறந்த அடைவை பெற்றுக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் சிறந்த அடைவுகளை பெற்ற சாதனையாளர்களுக்கு – விருது மற்றும் கெளரவிப்புக்களை இலங்கையிலும் வருடா வருடம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.





