தலைப்புச் செய்திகள்

இலங்கையிலிருந்து இவ்வருடம் 4500க்கும் மேற்பட்டோர் தென்கொரியா சென்றுள்ளதாக தகவல்

இலங்கையர்கள் 4556 பேர் இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களுக்குள் தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேலும் 170 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் நேற்று முன்தினம் (03) தென் கொரியாவிற்கு சென்றுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 470 ஊடாக ஆண்களும் பெண்களும் அடங்கிய குழு நேற்று முன்தினம் சென்றது.

இதேவேளை, தமது சேவைக் காலத்தை பூர்த்தி செய்த 3,565 இலங்கையர்களில், 991 பேர் – தென் கொரியாவில் தங்களின் முந்தைய வேலைவாய்ப்பில் மீண்டும் சேர்வதற்காக அனுமதி பெற்றுள்ளனர்.

தென் கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கையில், உற்பத்தித் துறையில் 3,774 பேரும், மீன்பிடித் துறையில் 639 பேரும், கட்டுமானத் துறையில் 140 பேரும், விவசாயத் துறையில் 3 பேரும் உள்ளனர்.

அந்த வகையில் கடந்த 08 மாதங்களில் தென்கொரியா சென்ற குழுக்களில் 4,462 ஆண்களும் 94 பெண்களும் உள்ளனர் என, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.