மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு

🕔 September 6, 2023

– முன்ஸிப் அஹமட் –

லங்கை கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ‘800’ எனும் திரைப்பட முன்னோட்டம் (Trailer) வெளியாகியுள்ள நிலையில், அதில் மலையக மக்களை குறிக்கும் தவறான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த முன்னோட்டத்தில் குறித்த வார்த்தையை – நடிகர் நாசர் சொல்வதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அந்த வார்த்தைக்குப் பதிலாக ‘நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன்’ என்று குறிப்பிடுமாறும் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், “நீங்கள் பிறந்த தேசிய இன சமூகத்தையே இழிவு படுத்தும் வார்த்தை பிரயோகம் வேண்டாம்” என, முரளியைக் குறிப்பிட்டு மனோ கணேசன் கூறியுள்ளார்.

மேலும், “இந்நாட்டு இ்ந்திய வம்சாவழி மலையக தமிழர் மத்தியில், தடை செய்யப்பட்ட வார்த்தையை உங்கள் திரைப்பட முன்னோட்டத்தில் பயன்படுத்த வேண்டாம்” எனவும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அந்த வார்த்தையை – நானே நேரடியாக தடை செய்து பகிரங்கமாக காட்டியுள்ளேன்” என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டிருக்கிறார்.

“கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம். நானே ஒரு கதாசிரியர்; எனக்கு இது தெரியும்”.

“குறித்த சொல் வரும் இடத்தில் ‘நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்’ என்று மாற்றி போடுங்கள். எல்லாம் சரியாக வரும்” என, மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றின் போது, குறித்த வார்த்தையைப் பயன்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் – ஆக்ரோசமாகத் தாக்குவதற்கு முற்சித்தமை குறிப்பிடதக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்