தலைப்புச் செய்திகள்

தம்மிடம் கொள்வனவு செய்த மின்சாரத்துக்கான கொடுப்பனவை வழங்கக் கோரி, சூரிய சக்தி முதலீட்டாளர்கள், மின்சார சபையின் கல்முனை பிராந்திய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் –

சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் முதலீட்டாளர்கள் இன்று (12) இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கடந்த 09 மாதங்களாக தங்களிடமிருந்து பெற்ற மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும், அதனை உடனடியாக வழங்குமாறும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

லங்கா சூரிய சக்தி முதலீட்டாளர் சங்கத்தினர் எனும் பெயரில் ஒன்றிணைந்து, அவர்கள் இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையினர் வழங்கும் மின்சார அலகுகளுக்கு கட்டணத்தை அதிகரித்துள்ள போதிலும், தங்களிடம் கொள்வனவு செய்யும் மின்சார அலகுகளுக்ககு குறைந்த தொகை கொடுப்பனவே வழங்கப்படுவதாகவும் இதன்போது அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, தம்மிடமிருந்து கொள்வனவு செய்யும் மின்சார அலகுகளுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்குமாறும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

கல்முனை பிராந்தியத்தில் மாத்திரம் 13 MW க்கும் அதிகமான மின்சாரத்தை, இலங்கை மின்சார சபைக்கு தாம் உற்பத்தி செய்து வழங்குவதாகவும் அவர்கள் இதன்போது கூறினர்.

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு – கல்முனைப் பிராந்தியத்தில் மாதாந்தம் 40 மில்லியன் ரூபாவினையும், கிழக்கு மாகாணணத்தில் ஒவ்வொரு மாதமும் 70 மில்லியன் ரூபாவினையும் இலங்கை மின்சார சபை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கை மின்சார சபை – மின் கட்டணத்தினை உச்சமாக சீரமைத்துள்ள தருணத்தில், அதிகரித்த பணவீக்கம் மற்றும் பொருட்செலவுகள் , பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு, சூரிய மின்சாரத்தை வழங்கும் தமக்கான கொடுப்பனவுகளையும் அதிகரிக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினர்.

சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் மின்சாரத்துக்காக, அலகு ஒன்றுக்கு 22 ரூபாவினையே இலங்கை மின்சார சபை வழங்கி வருகின்றது.

இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையினை அடுத்து, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பிரதம பொறியலாளர் ஏ.எம். ஹைக்கல் இடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.

இதன்போது அங்கு பேசிய கல்முனை பிராந்திய பிரதம பொறியியலாளர் ஹைக்கள்; “இலங்கையில் கல்முனைப் பிராந்தியத்திலேயே அதிகளவு சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்கள் உள்ளனர்” என்றார்.

மேலும், கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் முன்வைத்த கோரிக்கைகளை மேலிடத்துக்கு தெரியப்படுத்தி, அதற்கான தீர்வுகளை முடிந்த வரையில் விரைவாக பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.