எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம்

🕔 March 27, 2023

மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு – நாட்டில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்களுக்கு – பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனத்துடன் (Shell plc) இணைந்து எரிபொருள் விற்பனையில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.

மூன்று நிறுவனங்களுக்கு – எரிசக்தி குழு மற்றும் பிற தொடர்புடைய கொள்முதல் குழுக்கள் செயல்பட உரிமம் வழங்க ஒப்புதல் மற்றும் பரிந்துரையை வழங்கியுள்ளன என்று, தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நிறுவனங்களுக்கும் தலா 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்படும் என்றும், அவை தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) இயக்கப்படுபவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மேலும் தலா 50 எரிபொருள் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களால் புதிய இடங்களில் நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் 20 வருடங்கள் இயங்குவதற்கு அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என தனது ட்விட்டர் பதிவில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 2022 இல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதி மற்றும் சில்லறை விற்பனைச் சந்தையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களுக்குத் திறப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியது.

அதே ஆண்டு ஒக்டோபரில், பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) மசோதாவானாது – புதிய வழங்குநர்கள், பெட்ரோலியப் பொருட்களுக்கான இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நுழைவதற்கு வழி வகுத்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்