நிலையான சமாதானத்தை தொடர, வெறுப்புப் பேச்சை தவிர்ப்போம்

🕔 March 27, 2023

– எம்.ஐ.எம். றிஸ்வான் –

“இரு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பகுதியில் நான் உள்ளேன் ஒரு மாற்று மத சகோதரியின் குடும்பம் பக்கத்து வீடு என்பதால் அவர்களுடன் நீண்ட காலமாக நாங்கள் குடும்ப உறவுமுறை போல பழகி வந்தோம். கடந்த சில வருடங்களுக்கு முன், எங்கள் இரு மதங்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சினை குறித்து, சமூக ஊடகங்களில் பெரிதாக வெறுப்பு பேச்சுகள் மூலம் பகிரப்பட்டது. குறித்த விவகாரம் தொடர்பான கதைகள் எமது பகுதியில் அதிகரித்த வேளை – நான் அவர்களின் வீட்டுக்கு 06 மாதங்களுக்கு மேல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எங்கள் இருவருக்கும் இது மிகவும் கடினமான காலப் பகுதியாக இருந்தது” என்று தனது அனுபவத்தை – அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கவலையுடன் பகிர்ந்து கொண்டார் (அவரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது).

இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு மேற்சொன்ன அனுபவ பகிர்வுபோல, பல விடயங்களால் – சுமார் நான்கு வருடங்களுக்கு முதல் இருந்தே தூண்டப்பட்டிருந்தேன். என் மனதில் இருந்த கவலைகள் இதனை எழுதத்தூண்டியது எனலாம்.ஷ

எமது நாட்டில் சில இன ரீதியான முறுகல்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டபோது சமூக ஊடகங்கள்மூலம் வந்த தாக்கங்கள், அதன் மூலம் பரப்பப்பட்ட சில விடயங்கள் தொடர்பில் நீங்கள் யாவரும் அறிந்திருப்பீர்கள். அவ்வாறான பல பதிவுகளைப் பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் கண்ணுற்றபோது, சில பொய்யான தகவல்களையும் சில இன ரீதியாக வெறுப்பையும் பகைமையையும் ஊட்டும் கருத்துக்களையும் சிலர் அறியாமல் அதன் பிண்னனியை சரியாகப் பார்க்காமல், சமூகம் சார்ந்த விடயங்கள் என நினைத்து அதனைப் பகிர்ந்தனர். ஆனால் அவை இறுதியில் சில வன்முறைகளுக்கு வித்திட்டன, சில பொருளாதார இழப்புகளுக்குக்கொண்டு சென்றன. நாட்டின் அமைதியான சமாதானச் சூழலை மீண்டும் சீர்குலையலாம் என்ற அச்சம் மேலோங்கி நின்றமையும்ஏற்றபட்டது என்பதை யாவரும் அறிந்த அறிவோம்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில காலங்களில் சிறிய ஒரு விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை – முகநூலில் பரஸ்பரம் ஒருவர் மற்ற மதத்தவருக்கு எதிராகக் கொச்சைப்படுத்தி, வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் எழுயமை என்னை வேதனைப்படுத்தியது. இவ்வாறானவர்களின் அறியாமை, சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கை, இவ் விடயத்தின் தாற்பரியம் பற்றித் தெளிவுபடுத்தும் ஒரு கட்டுரையாகவும் இதனைப் பார்க்கிறேன்.

உலகில் சமாதானம் நிலைத்தால் மட்டுமே அமைதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படல் போன்ற பல விடயங்கள் நிலைபெறும். உலக யுத்தங்களின் தாக்கங்களை உணர்ந்தே ஐக்கிய நாடுகள் எனும் சபை உருவாக்கப்பட்டதை யாவரும் அறிவீர்கள். உலகில் யுத்தங்கள் இடம்பெறக்கூடாது என்று சகலரும் விரும்பினாலும் துரதிஷ்டவசமாக ஏற்படும் நல்லிணக்கமற்ற தன்மை சமாதானத்தைச் சீர்குலைத்து விடுகின்றது.

எம் இலங்கைத் தீவிலும் சமாதானத்தை எட்டியுள்ளோம். அது தொடர்ந்தும் நிலைபெற சமாதானத்தைச் சீர்குலைக்கும் விடயங்களை விட்டும் – எம்மையும் எமது சமூகத்தையும் எம்தாய் நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தொழில்நுட்ப மாற்றங்கள் அடைந்துவரும் நவீன உலகில், சமூக ஊடகங்களான Facebook , Youtube, Twitter, Tiktok, Whatsapp போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெறுப்பு பேச்சுக்கள், சமாதானத்தை சீர்குலைத்து வன்முறையை உருவாக்கும் காரணியாக அமைந்து வருவதை எமது நாட்டிலும் கடந்த காலங்களில் அனுபவரீதியாகக் கண்டுள்ளோம்.

வெறுப்பு பேச்சு என்பது வன்முறையை உருவாக்கும் ஒரு கருத்து அல்லது தொடர்பாடல் எனலாம். இது ஒருவரின் இனம், மதம், மொழி பாலினம், கலாச்சாரம், தேசியம் அல்லது சில அடையாளங்கள் மீது தீங்கு விளைவிக்கும் – மனிதாபிமானமற்ற, கோபத்தை உருவாக்கும் சில வேளை வன்முறையை உருவாக்கும் கருத்துக்களாகும். பேச்சு சுதந்திரம் எமக்கு இருந்தாலும் மேற்சொன்ன விடயங்களை கவனத்தில் கொண்டு அது அமைதல் வேண்டும்.

பிறருக்கு அல்லது பிற சமுகத்துக்கு கோபத்தை உண்டாக்கும் இவ்வாறான வெறுப்புணர்வூட்டும் கருத்துக்கள், வாய்வழி பேச்சுக்களாக அல்லது ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் எழுத்திலான பதிவுகளாக, குரல் பதிவுகளாக, வீடியோ பதிவுகளாக, காட்டூன்களாக, ‘மீம்ஸ்’களாக (புகைப்படங்கள் மூலமாக உருவாக்கப்படுபவை) அமைகின்றன.

இவ்விடயமாகச் சில சமூக செயற்பாட்டாளர்களை, பொதுமக்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தபோது, மூவின அரச ஊழியர்களுள்ள ஓர் அலுவலகத்தில் பணி புரியும் என். அஸ்ரப் (வேண்கோளுக்கு இணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது அனுபவத்தை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“2018, 2019 காலப்பகுதியில் நான் மிகவும் சிக்கலான சில நாட்களை எனது வாழ்வில் எதிர்கொண்டேன். குறித்த காலப் பகுதியில் சமூக ஊடகங்கள் மூலமாகப் பல்வேறு வெறுப்பு பேச்சுக்கள் பகிரப்பட்டன. அது தொடர்பான கதையாடல்கள் தினமும் எமது அலுவலகத்தில் இடம்பெறும். இந்த நேரம் இன்னொரு மதத்தவர்களுடன் ஒரு சிறந்த சூழலில் பழகும் நாங்கள் சில சிரமங்களை எதிர்கொண்டோம். அந்த வகையில் எனது அலுவலக நாளில் சில சூழ்நிலையில் நான் விடுமுறை கூட எடுத்திருக்கின்றேன்.

குறிப்பிட்ட சிலர் உண்டாக்கிய வதந்திகள் மற்றும் வெறுப்புணர்வூட்டும் சமூக ஊடக பிரசாரங்கள் காரணமாக, எமது நல்லிணக்கத்தில் விரிசல் ஏற்பட்டது. இதற்காக நான் அலுவலக இடமாற்றத்துக்குக் கூட முயன்றிருந்தேன். அத்தோடு சமாதான சூழலுக்கு மீண்டும் ஆபத்தை விளைவிக்கும் இவ்வாறான கருத்துக்கள் மீண்டும் எனது நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி விடக்கூடாது என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தனது கவலைகளை வெளிப்படுத்தினார்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மூலம் சமாதானத்துக்கு சீர்குலைவு வருவதாக கூறும் – பெண்கள் செயல்பாட்டாளர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா.P, பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்

ஜெனிதா

“இரு இனங்கள் வாழும் ஓர் எல்லைக் கிராமத்தில் உள்ளவள் என்ற ரீதியில் சமாதான மூலமே சகல நலவுகளையும் அடைய முடியும் எனக் கடந்த காலங்களில் உணர்ந்துள்ளேன். பல நிறங்கள் கொண்ட பூந்தோட்டத்தை நாம் விரும்புவது போல, பல்லின மக்கள் வாழும் பல்வகையான கலாச்சாரத்தை நாம் ஏற்றுக் கொண்டால் அவற்றின் மூலம் நமக்குள் வெறுப்பு கருத்துக்கள் உருவாகாது”.

“இரு தனி நபர்களின் பிரச்சினை இன்று சமூகப் பிரச்சினையாக உருவாக்கப்படுவதோடு, அதற்குக் காரணமாக சமூக ஊடகங்களும் வெறுப்பு பேச்சுக்களும் காரணமாக அமைந்து விடுகின்றன. இதன் மூலம் வன்முறை, அதன் தொடர்ச்சியாகச் சமாதானத்துக்குப் பாதிப்பு எனத் தொடராக வருகின்றன”.

“அரசியல் லாபங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட சில செயற்பாடுகள் மூலம் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் உருவாக்கப்படுகின்றன. அவை தொடர்பில் பொதுமக்களாகிய நாம் அவதானமாக இருக்க வேண்டும். சமூகப் பிறழ்நடத்தை உள்ளவர்களை புறக்கணித்து, பொதுமக்கள் சமாதானத்தினை நிலை பெற பாடுபட வேண்டுமென வேண்டுகிறேன்” என ஜெனிதா கூறினார்.

அத்தோடு அறியாமை காரணமாக சில வெறுப்பூட்டும் கருத்துக்களைக் பகிரும் சிலரை – கடந்த காலங்களில் அவதானித்து மனவேதனை அடைந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார். “அவை தொடர்பாக அவ்வாறானவர்கள் அறிந்து அதிலிருந்து விலகி நடக்க வேண்டும் எனவும் நான் அவர்களை வேண்டுகிறேன்” எனவும் அவர் கோரிக்கை விடுத்டதார்.

வெறுப்புப் பேச்சுக்கள் குறித்து சமூக ஆர்வலர் சமூகவியல் முதுமாணி ரி.எம். ஹப்ரத் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

“வெறுப்பு பேச்சு என்பது – நவீன தொழிநுட்பம் மூலம் குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் தாக்கங்கள் நமக்கு மட்டுமல்லாமல் எமது அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. அத்தோடு சில சமயங்களில் பிழையான, உள் நோக்கமுடைய, சில தீய சக்திகளால் அடிப்படையாற்ற ஆதாரங்கள் மூலம் பரப்பப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மூலம், கடந்த காலங்களில் உருவான சில வன்முறைகளை நாங்கள் நேரடியாகக் கண்டுள்ளோம். இதன் மூலம் நாம் பொருளாதார இழப்புக்கள் மட்டுமின்றி, நீண்ட கால சமூக விரிசலையும் சந்தித்தோம். எனவே சமாதான வாழ்வுக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய விடயங்களில் – வெறுப்பு பேச்சு என்பது சமூகவியல் நோக்கில் முக்கியமானது” என அவர் விவரித்தார்.

ஹப்ரத்

“வெறுப்பு பேச்சுக்களைத் தவிர்ப்பது சம்பந்தமாக – சிறுபராயம் முதல் அறிவூட்டுவது சமூகநோக்கில் சிறந்து. காரணம் அதன் தார்ப்பரியங்களை அறிந்த இளம் சமூகத்தினர் எதிர்காலத்தில் சகிப்புத்தன்மையோடு நடந்து நிலையான சமாதானத்துக்காக பாடுபடுவர்” என்றார்.

இலங்கை தேசிய சமாதான பேரவையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நிரோஷா அந்தோணி ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்; “ஆயுத மோதலில் ஏற்படும் காயங்களை நம் வெற்றுக்கண்களால் பார்க்க முடியும், ஆனால் வெறுக்கத்தக்க பேச்சு ஏற்படுத்தும் இதயக் காயங்களை எம்மால் காண இயலாது” என்கிறார்.

மேலும் “அவ்வாறான மனக் காயங்களைக் குணப்படுத்துவது கடினமாகும்” எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நிரோஷா

“நாங்கள் 30 ஆண்டுகால யுத்தத்தை எதிர்கொண்டோம். போருக்குப் பிறகு, இனங்களிடையே சமாதானம் மற்றும் சகவாழ்வை நாங்கள் விரும்பினோம். ஆயினும், நாங்கள் எதிர்பார்த்ததை எங்களால் பார்க்க முடியவில்லை. வெறுக்கத்தக்கப் பேச்சை நாங்கள் இன்னும் கேட்கிறோம், பார்க்கிறோம். இன்று, பாடசாலை மாணவர்கள் கூட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இவற்றைப் பார்க்கிறார்கள், அவற்றிற்குப் பதிலளிக்கிறார்கள். சமுதாயத்தில் வெறுப்பை பரப்புவதற்கு சொற்கள் மட்டுமல்லாது அடையாளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இதனைத் தடுக்க எம்மாளான முயற்சிகளை எமது திட்டங்கள் ஊடாக செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


தனியார் பல்கலைக்கழகமொன்றின் தகவல் தொழிநுட்ப விரிவுரையாளர் எம். நிசாட் – இவ்விடயம் சம்பந்தமாக பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் வெறுப்பூட்டும் பேச்சுக்களை சட்டத்தின் மூலம் தடை செய்யவும், மீறுவோருக்கு தண்டனை அளிக்கவும் வேண்டும் என, இலங்கையிலும் சமாதானத்தை விரும்பும் சில பொது அமைப்புக்கள் அண்மைக்காலமாகச் செயல்பட்டு வருவதாக நிசாட் குறிப்பிட்டார்.

“அவற்றின் தொடர்ச்சியாக பல்வேறு சந்திப்புகள், சமூக ஊடகங்கள் வாயிலான அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் விளைவாக சிறிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் உள்ளது போன்ற ‘சமூக ஊடக பாதுகாப்பு சட்டம்’ ஒன்றைக் கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளது. அத்தோடு இவ்வாறான விடயங்களைத் தொடர்ந்தும் திட்டமிட்டுச் செய்பவர்களைத் தொழில்நுட்ப ரீதியாகக் கண்டறிய முடியும். அது சிரமமான காரியம் அல்ல. வலுவான சட்டங்கள் கொண்டுவரப்படும் போது, இவ்வாறானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது இலகுவாக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

நிசாட்

இந்தியாவில் கடந்த 2023 ஜனவரி மாதம் – வெறுப்பு பேச்சு சம்பந்தமான வழக்கு ஒன்றுக்கான தீர்ப்பில் நீதிபதி நாகரத்னா குறிப்பிடும்போது; ‘வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட சகல பிரபலங்களும் பொதுமக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்’ எனவும் ‘இது ஒரு மனிதனின் கண்ணியத்தை மீறுவதால் அடிப்படை உரிமை மீறல்’ எனவும் கூறினார்.

“வெறுப்பு பேச்சு என்பது – அரசியலமைப்பில் கொடுக்கப்பட்ட பேச்சு சுதந்திரத்தை மீறும் செயல். சமாதானத்தைச் சீர்குலைக்கும் விடயம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் – நான்கு தடவைக்கு மேல் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமையை நாம் அறிந்துள்ளோம். காரணம் அவற்றினால் பரப்பப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மூலம் உருவான வன்முறைகளாகும். இந்த வன்முறைகளே நவீன காலத்தில் யுத்தங்களாக மாறும் நிலை அல்லது தீவிரவாதத்தை நோக்கி சிலர் பயணிக்கும் நிலையை உருவாக்கலாம் என, சமூகவியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

பொதுமக்களாகிய நாம் சகிப்புத்தன்மையோடும் வெறுப்புணர்வு பேச்சின் – பின் விளைவுகளைப் புரிந்து நடப்பதும் இவ்வாறான விடயங்களைத் திட்டமிட்டுச் செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும்.

வலுவான சட்டங்கள் விரைவாக உருவாக்கப்படுவதும் இந்த பிரச்சினையைப் பெருமளவு தீர்க்கும் வழிகளாக நான் கருதுகிறேன்.

மற்றவர்களின் கலாசாரம், மொழி, இனம், மதம், பாலினம் போன்ற பல அடையாளங்களை மதித்து – சகைப்புத்தன்மையுடன் அன்பைப் பரப்பும் சொற்கள் மூலம், சமாதானம் நிலைபெறும் அமைதியான தாய் நாட்டை எமது அடுத்த சந்ததிக்குக் கையளிக்கலாம் அல்லவா?.

(இந்தக் கட்டுரையாளர் B.A (Hons), Dip. In Counseling (NISD), LLB (R) ஆகிய தகுதிகளைக் கொண்டுள்ளார்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்