எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

🕔 March 24, 2023

ராகுல் காந்தி அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியமையினை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு பிணையினையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி – நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பையடுத்து, .இந்தியாவின் – வயநாடு மக்களவை உறுப்புரிமையிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அடுத்த கட்டமாக ராகுல் காந்தி என்ன செய்ய முடியும் எனவும் சட்ட வல்லுநர்கள் சில விளக்கங்களை அளித்துள்ளனர்.

மூன்று வழிகளில் பதவி பறிக்கப்படும்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநில சட்ட மன்ற உறுப்பினர் பதவிகள் பொதுவாக மூன்று முறைகளில் பறிக்கப்படும்.

முதலாவதாக, பதவியில் உள்ள ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருப்பது, மனநிலை சரியில்லாமல் இருப்பது, இந்திய குடியுரிமை இல்லாமல் இருப்பது போன்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக தகுதிநீக்கம் செய்யப்படுவார்.

இரண்டாவது முறை: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம், பிற கட்சிகளுக்கு மாறும் மக்கள் பிரதிநிதிகள் மீது தகுதிநீக்கம் கொண்டு வருவது.

மூன்றாவது முறை: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மூலமாக தகுதி நீக்கம் செய்யப்படுவது.

இலங்கையில், சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க போன்றோரும் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை காரணமாக தமது நாடாளுமன்ற உறுப்புரிமைகளை இழந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

தொடர்பான செய்தி: இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்