
ஈக்வடோரியல் கினியா (Equatorial Guinea) ஜனாதிபதி தியோடோரோ ஒபியாங் நுகுமா (Teodoro Obiang Nguema) – அங்கு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
80 வயதான ஒபியாங் இதன் மூலம் – ஆறாவது முறையாக பதவியில் அமர்கிறார்.
ஏற்கனவே 43 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள அவர், உலகின் மிக நீண்ட கால ஆட்சியாளராக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
நொவம்பர் 20ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி ஒபியாங்கின் கட்சி அனைத்து செனட் மற்றும் நாடாளுமன்ற இடங்களையும் கைப்பற்றியுள்ளதாக, அவரின் மகன் துணை ஜனாதிபதி தியோடோரோ நுகுமா ஒபியாங் மாங்கு நேற்று சனிக்கிழமை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘உறுதியான முடிவுகள் எங்களை மீண்டும் நிரூபிக்கின்றன’ என்று துணை ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார். ‘நாங்கள் ஒரு சிறந்த அரசியல் கட்சி என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறோம்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒபியாங்கின் ஈக்குவடோரியல் கினியாவின் ஜனநாயகக் கட்சியும் அதன் கூட்டணியும் செனட்டில் முழுமையான 55 இடங்களையும், கீழ் சபையில் 100 இடங்களையும் வென்றுள்ளது. மீதமுள்ள 15 செனட் ஆசனங்களை ஜனாதிபதி இப்போது நியமிக்கலாம் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
சுமார் 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் மேற்கு ஆபிரிக்க நாடான ஈக்வடோரியல் கினியா, 1968 இல் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்றது. அப்போதிருந்து இரண்டு ஜனாதிபதிகள் மட்டுமே ஆட்சிக்கு வந்துள்ளனர். 1979 இல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் ஒபியாங் தனது மாமா பிரான்சிஸ்கோ மசியாஸ் நுகுமாவை பதவி நீக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது.



