வெள்ளிக்கிழமை ‘குத்பா’கள்: வேண்டி நிற்கும் உடனடித் திருத்தங்கள்

🕔 November 12, 2022

– மப்றூக் –

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை ‘ஜும்ஆ’ தொழுகையும் அதற்கு முன்னர் நிகழ்த்தப்படுத் ‘குத்பா’வும் முக்கியமானவையாகும். ‘குத்பா’ எனும் அரபுச் சொல்லுக்கு ‘உபதேசம்’, ‘சொற்பொழிவு’ என அர்த்தங்களுள்ளன. வெள்ளிக்கிழமை ‘குத்பா’கள் – முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். பள்ளிவாசலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களை குத்பா சொற்பொழிவுகள் மூலம் அறிவூட்டவும் வழிநடத்தவும் முடியும். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை ‘குத்பா’கள் நிறைவேற்றுகின்றனவா என்கிற கேள்விகள் பலருக்கும் உள்ளன.

‘குத்பா’ சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்தல் வேண்டும். அந்த சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மக்கள் தமது பெறுமதியான நேரத்தை செலவிடுகின்றனர். அதனை செவிடுமடுப்பவர்களில் படித்தவர்கள், பெரும் அறிஞர்கள் உள்ளடங்கலாக விடயங்கள் அறிந்த பலர் இருக்கின்றனர். எனவே ‘குத்பா’கள் – வெறும் ‘சப்பைக் கட்டு’க்களாக அமைந்துவிடக் கூடாது. அவ்வாறான ‘குத்பா’க்கள் மக்களுக்கு நல்ல தூக்கத்துக்கே வழிவகுக்கும்.

ஜும்ஆ நாட்களில் குத்பா உரைகளை நிகழ்த்துவோர் ஆகக்குறைந்தது 04 விடங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

  1. தெரிவு செய்யும் தலைப்பு/விடயம்.
  2. சொல்லப்படும்/முன்வைக்கப்படும் விதம்
  3. பயன்படுத்தும் சொற்கள்
  4. சொல்லும் தொனி

ஆகியவை அந்த நான்கு விடயங்களுமாகும்.

தலைப்பு/விடயத்தை தெரிவு செய்வது எப்படி?

அநேகமானோரின் குத்பாகள் – ‘பொத்தாம் பொதுவானவை’யாகவே அமைந்து விடுகின்றன. ‘நன்மை செய்தால் சுவர்க்கம் கிடைக்கும், தீமை செய்தால் நரகம் கிடைக்கும்’ என்பது யாருக்கும் தெரியாததல்ல. ஒன்றரை மணி நேரம் அதனை ஒரு ‘குத்பா’வில் ‘அரைக்க’ வேண்டிய தேவை கிடையாது.

எனவே, சமகால பிரச்சினைகள் குறித்து ‘குத்பா’ தலைப்புகள் அமைய வேண்டும். உதாரணமாக நாட்டில் போதைப் பொருள் பாவனை மாணவர்களிடையே அதிகரித்திருக்கிறது. போதைக்கு அடிமையான 81 மாணவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் நாடாளுமன்றில் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

முஸ்லிம்களிடையேயும் போதைப் பாவனை, போதைப்பொருள் வர்த்தகம் போன்றவை ‘கண்டமேனிக்கு’ அதிகரித்துள்ளதாக நாளாந்தம் கிடைக்கும் தகவல்களும் செய்திகளும் கூறுகின்றன.

அப்படியென்றால், ‘குத்பா’கள் இது தொடர்பிலேயே அடுத்த வாரங்களில் அமைதல் வேண்டும். ஆத்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அந்த ‘குத்பா’கள் அமைய வேண்டும். அதற்கு ‘குத்பா’ நிகழ்த்துவோர் – விடயமுள்ளவர்களாகவும், தேடலுள்ளோராகவும் இருத்தல் அவசியமாகும்.

ஒத்திகை இல்லாத உரைகள்

அடுத்தது, தெரிவு செய்யும் தலைப்பை/விடயத்தை மக்களிடம் எப்படி ஒப்புவிப்பது என்பது முக்கிய அம்சம். பேச்சு என்பது ஒரு கலை. நாம் நினைப்பதை, நாம் எடுத்துக் கொண்ட தலைப்பை – சுவாரசியம் குறையாமலும், நேர்த்தியாகவும் சொல்ல வேண்டும். ஆனால் அநேகருக்கு இது எப்படி என்று தெரியாது.

“இன்று குத்பா நன்றாக இருந்தது” என்று, எப்போதாவது ஒரு முறைதான் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலை விட்டு வெளியேறுவோர் கூறக் கேட்கிறோம். சிலர் எந்தத் தலைப்பும்/விடயங்களும் இல்லாமலேயே, சுவாரசியமாக பல மணிநேரம் உரையாற்றுவார்கள். அவர்கள் – பேசும் கலை வாய்க்கப் பெற்றவர்கள்.

பேச்சுக் கலையில் தேர்ச்சி பெறுவதற்கு – பயிற்சியும் ஆயத்தமும் ஒத்திகையும் அவசியமாகும். ஆனால், ‘குத்பா’ உரைகளை நிகழ்த்துவோரில் கணிசமானோர், இவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு, அவர்களின் தூக்கத்தை ஏற்படுத்தும் பிரசங்கங்கள் சாட்சிகளாக உள்ளன.

சொற்கள்

ஒரு பேச்சாளருக்கு சொற்கள் மிக அவசியமாகும். தான் கூற நினைப்பதை எவ்வகையான சொற்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஒரு நல்ல பேச்சாளர் தெரிந்திருப்பார்.

அதிக சொற்களை அறிந்திருப்பவர்கள்தான் நல்ல, சுவாரியமான உரைகளை நிகழ்த்த முடியும். தொடர்ச்சியான, ஆழ்ந்த வாசிப்பின் மூலமாகவே ஒருவரிடம் அதிக சொற்கள் வந்து சேரும்.

சில வாரங்களுக்கு முன்னர் குத்பா உரை நிகழ்த்திய ஒருவர்; “நம்மை அழ்ழாஹ் செவிடர்களாகவும், குருடர்களாகவும் படைக்கவில்லையே என்பதற்காக, அழ்ழாஹ்வுக்கு நாம் பெரும் நன்றிக் கடனுடையோராக இருக்க வேண்டும்”எனக் கூறினார்.

உடற்குறைபாடுகளையும், உடற்குறைபாடுகளைக் கொண்டோரையும் குறிப்பதற்காக, தற்போது புதிய சொற்கள் பயன்பாட்டில் உள்ளன.

‘குத்பா’ நிகழ்த்துகின்றவர் ‘குருடர்’ என்கிற சொல்லைப் பயன்படுத்தும் போது, அதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் பார்வையற்ற ஒருவர், எவ்வளவு மன வருத்தப்படுவார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனை விளங்காமல் அவ்வாறான சொற்களைப் பயன்படுத்துகின்றவர், ‘குத்பா’ நிகழ்த்துவதற்கு தகுதியற்றவராவார்.

பார்வை குறைபாடு உடையவர், விழிப்புலனற்றவர், பார்வையற்றவர் என, கண்தெரியாதவர்களைக் குறித்துக் கூறுவதற்கு ஏராளமான நல்ல சொற்கள் உள்ளன.

காட்டுக் கத்தல்

‘குத்பா’ என்றாலே – அவை உரத்த சத்தத்தில் – காட்டுக் கத்தலாக அமைய வேண்டும் என்றும், அவையே நல்ல குத்பாக்கள் என்றும் பிரசங்கம் நிகழ்த்தும் பலர் புரிந்து வைத்திருப்பது போல் விளங்குகிறது.

உரத்த சத்தம் – அதனைக் கேட்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால், குத்பாவில் சொல்லப்படும் விடயம் மக்களைச் சென்றடையாது. ‘இந்த ஆள் முடித்தால் போதும்’ எனும் மனநிலை மக்களுக்கு ஏற்பட்டு விடும்.

ஒரு விடயத்தை அழுத்திச் சொல்வதற்கு உரத்த சத்தம் பொருத்தமானது என பலர் நினைக்கிறார்கள். ஆனால், உயர்த்த வேண்டியது தொனியைதானே தவிர – சத்தத்தையல்ல.

ஒழுங்குபடுத்தல் முறைகள்

ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள பெரிய பள்ளிவாசல்கள் ‘குத்பா’ நிகழ்த்துபவர்களின் பெயர்களை பட்டியலிட்டு தம்வசம் வைத்திருக்க வேண்டும்.

அவர்களுக்கு ஆகக் குறைந்தது ஒவ்வொரு மாதமும் பெரிய பள்ளிவாசல்களால் பயிரலங்கு (Workshop) கள் நடத்த வேண்டும்.

கல்விப் பின்புலமுள்ள மார்க்க மேதைகள், உளவியலாளர்கள், துறைசார் அதிகாரிகள் (உதாரணமாக – பொலிஸ், கலால் திணைக்களம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை போன்றவற்றின் அதிகாரிகள்), சட்டத்துறை விற்பன்னர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் போன்றோரை, இந்தப் பயிலரங்குகளில் வளவாளர்களாகப் பயன்படுத்த முடியும்.

போதை வஸ்து தொடர்பில் ஒரு குத்பா நடத்த வேண்டியுள்ளது என வைத்துக் கொள்வோம். அதில் சொல்லப்படும் விடயங்களைப் பொறுத்தே, அந்த குத்பாவின் வெற்றி – தோல்வி தங்கியுள்ளது.

‘போதை வஸ்து இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டுள்ளது, அதனை பாவிப்பதும், விற்பது – வாங்குவது உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதும் பாவமாகும். இந்தப் பாவத்தைச் செய்தால் நரகம் கிடைக்கும்’ என்பதை மட்டும் வைத்து, ஒரு ‘குத்பா’வில் மா அரைக்க கூடாது. இந்த விடயங்கள் தெரியாத யாரும் ‘குத்பா’வுக்கு வருவதுமில்லை.

போதை வஸ்து தொடர்பில் ஒரு ‘குத்பா’ நடத்தும் போது, போதை வஸ்து என்றால் என்ன? போதை வஸ்து என்பதற்கு இஸ்லாம் என்ன வலைவிலக்கணத்தைக் கூறுகிறது, சட்டம் கூறும் வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் போதை வஸ்துக்களை தம்வசம் வைத்திருந்தால் என்ன வகையான தண்டனைகள் கிடைக்கின்றன, போதைவஸ்து பாவிக்கும் போது உடலில் எவ்வாறான பாதிப்புகளெல்லாம் ஏற்படுகின்றன, போதைவஸ்து பாவிப்பவர்களிடம் ஏற்படும் அறிகுறிகள் என்ன, போதைக்கு அடிமையான ஒருவர் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? இஸ்லாமிய முறையில் போதைப் பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் – என்பது பற்றியெல்லாம் அந்தக் குத்பாவில் சொல்லப்படுதல் வேண்டும். அதுவே நல்ல ‘குத்பா’வாக அமையும்.

இவ்வாறான ஒரு ‘குத்பா’வை நிகழ்த்த வேண்டுமாயின், அதற்கு நிறைய சுய தேடல்கள் இருக்க வேண்டும். பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும், ஆழ்ந்த வாசிப்பு அவசியமாகும்.

ஆனால் துரதிஷ்ட வசமாக ‘ஹறாம் – ஹலால், சொர்க்கம் – நரகம் என்கிற வார்த்தைகள், இடையில் சில ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்கள், அடிக்கடி கண்ணியமானவர்களே என்கிற விழிப்புகள்’ இவற்றின் கலவையாக மட்டுமே தற்கால ‘குத்பா’களில் அநேகமானவை உள்ளன.

முகம்மது நபியவர்களின் பிறந்த நாள் வரும் போது, அவர்களின் ‘சுய விபர’ குறிப்புகளை மட்டும் பேசுவதும், ஹஜ் பெருநாட்களில் இஸ்மாயில் நபியவர்களை அவரின் தந்தை இப்றாகிம் நபி – அறுக்க முயற்சித்த கதையினை மட்டும் கூறுவதும், இன்னும் எத்தனை நாட்களுக்கு நமது ‘குத்பா’களில் தொடரப் போகின்றனவோ தெரியவில்லை.

வரலாறுகள் நமக்குப் பாடங்களாகும். ஒரு வரலாற்றைக் கூறும் போது அதிலுள்ள ஆத்மீக விடயங்களுடன், அறிவியல் விடயங்களும் சேர்த்துச் சொல்லப்படுதல் வேண்டும். வெறும் கதைகள் கூறும் மேடைகளாகவும், அரைத்த மாவை அரைக்கும் இடங்களாகவும் ‘குத்பா’களை நிகழ்த்தும் ‘மிம்பர்’கள் அமைந்து விடக் கூடாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்