தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து றிசாட் பதியுதீன் விடுவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து, மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கை தொடர வேண்டாம் என சட்டமா அதிபரின் ஆலோசனையை அடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து றிசாட் பதியுதீனை விடுவிக்குமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 111 நாட்கள் சிஐடியால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.