போலி விருதைப் பெற, அரச செலவில் இந்தியா பயணித்த கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள்: ‘திருகுதாளம்’ அம்பலமானது

🕔 October 16, 2022

ந்தவித அங்கீகாரமுமற்ற போலி விருதொன்றினை பெறுவதற்காக கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர், அரச வளங்களைப் பயன்படுத்தி இந்தியா சென்றுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த  செயலாளர் மற்றும் பணிப்பாளர் ஆகிய தரங்களிலுள்ள நான்கு பேர் – இவ்வாறு இந்தியாவின் சென்னை நகருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் இன்று (15) சனிக்கிழமை மாலை இடம்பெற்றவுள்ள ‘பிஸினஸ் குளோபல் இன்டர்நெஷனல் அவர்டிங் செர்மோனியில்’ இவர்கள் நான்கு பேருக்கும் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

சிவில் நிர்வாகத் துறையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களுக்கு, சர்வதேச வியபாரா நிறுவமொன்றினால் விருது வழங்கப்பட்டதன் மூலம் – குறித்த விருது தொடர்பில் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் எந்தவித அங்கீகாரமுமில்லாத சில அமைப்புக்களினால், மேற்படி நான்கு உயர் அதிகாரிகளும் இந்த விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை கவனிக்கத்தகதாகும்.

இந்த விருதினை பெறுவதற்கு, குறித்த நான்கு உயர் அதிகாரிகளும் ‘அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையுடன்’ இந்தியா செல்வதற்கான அனுமதியினை – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதற்கு மேலதிகமாக, இந்தியாவுக்கான பிரயாணச் செலவாக தலா 100 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில், குறித்த நான்கு உயர் அதிகாரிகளும் மொத்தமாக 400 அமெரிக்க டொலர்களை கிழக்கு மாகாண சபையிடமிருந்து பெற்றுச் சென்றுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அது மாத்திரமல்லாமல், திருகோணமலையிலிருந்து விமான நிலையம் பயணிப்பதற்கு, இவர்கள் நான்கு பேரும் கிழக்கு மாகாண சபைக்கு சொந்தமான அரச வாகனங்களை பயன்படுத்தியுள்ள விடயமும் தெரிய வந்துள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக தேவையற்ற செலவுகளை குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மேற்படி நான்கு அரச அதிகாரிகளின் தனிப்பட்ட நலன்களுக்காக, பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

நன்றி: விடியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்