
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள சுமார் 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களில் குறைந்தது 3.5 மில்லியன் பேருக்கு உணவு வழங்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆயினும் பாடசாலை மாணவர்களுக்கு அவ்வாறு உணவு வழங்க எந்த முற்போக்கான திட்டத்தையும் கல்வி அமைச்சு உட்பட அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும் சங்கம் கூறியுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றுடன் பேசிய – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்; “தற்போது பாடசாலை மாணவர்களின் உணவு தொடர்பான தேவைகள் குறித்து மிகவும் மோசமான சூழ்நிலை உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதுமான உணவை வழங்க வழி இல்லாமல் உள்ளனர். அரசாங்கம் முன்பு பாடசாலை மாணவர்கள் ஒரு மில்லியன் பேருக்கு மட்டுமே உணவு வழங்கியது. அந்த திட்டமும் தற்போது முறையாக செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், குறைந்தது 3.5 மில்லியன் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்” என்றார்.
“சில பாடசாலைகளில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து சமைத்தல் அல்லது பாடசாலைகளைச் சுற்றியுள்ள வீடுகளில் இருந்து உணவுப் பொட்டலங்களை சேகரித்து மாணவர்களுக்கு விநியோகித்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதிலும் இவை எதுவும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையவில்லை” என அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படுவதாகவும், இதனால் சில சமயங்களில் உளவியல் ரீதியாகவும் ஏனைய மாணவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்தச் சூழலுக்கு அரசுதான் நிரந்தரத் தீர்வைக் கொடுக்க வேண்டும். முதலாவதாக, மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தற்போது மிகக் குறைந்த தொகையான ஒரு வேளை உணவுக்கு 60 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்தத் தொகை போதுமானதாக இல்லை.
மேலும், பாடசாலைகளுக்கு உலர் உணவுகளை விநியோகிக்கவும், மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதற்கு பெற்றோரின் ஆதரவைப் பெறவும் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்யலாம். ஆனால், அரசு இதுவரை எந்த முன்னேற்றகரமான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.



