நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம்

🕔 January 5, 2016

Hakeem - 878
– ஜெம்சாத் இக்பால் –

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓராண்டு பதவிக்கால நிறைவை முன்னிட்டு அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக சிறுநீரக நோய் அதிகரித்து காணப்படும் பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வார இறுதியில் இரண்டரை கோடி ரூபா செலவில் நீரை சுத்திகரிக்கும் இயந்திரங்களின் செயற்பாட்டை தாம் ஆரம்பித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், ஜயந்திபுர கிராமத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

80 வீத மக்களுக்கு குழாய் நீர் வசதி

“எனது பணிப்புரைக்கு அமைவாக 23 பாரிய நீர் வழங்கல் திட்டங்களும், 40 நடுத்தர நீர் வழங்கல் திட்டங்களும் நூற்றுக்கும் அதிகமான சிறிய நீர் வழங்கல் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

அத்துடன் நாட்டில் 75 சதவீதம் தொடக்கம் 80 சதவீதம் வரையிலான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அபாயகரமான ரசாயன பொருட்கள் மற்றும் தரக்குறைவான பசளை என்பன, நீரில் கலப்பதன் விளைவாகவும், நீரின் கனதி அதிகரிப்பதன் காரணமாகவும் சிறுநீரக நோய்களால் பல மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே சில ஆபத்தான ரசாயன பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நாம் தற்பொழுது சிறுநீரக நோய் அதிகரித்து காணப்படும் பல்வேறு மாவட்டங்களில் நிர்மாண செலவு உட்பட ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் 28 லட்சம் பெறுமதியான நீரை சுத்திகரிக்கும் ரிவேர்ஸ் ஒஸ்மோஸிஸ் (ஆர்ஓ) எனப்படும் இயந்திரங்களை பொருத்தி அவற்றினூடாக ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தூய நீரை வழங்கி வருகின்றோம்.

ஜனாதிபதியின் வேண்டுகோளை மதித்து, சீன அரசாங்கம் கண்டியில் 100 மில்லியன் டொலர் செலவில் சிறுநீரக நோய் தொடர்பான ஆய்வு கூடமொன்றை நிர்மாணித்து தருவதற்கு முன்வந்துள்ளது.

5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம்

அத்துடன், நீர்ப்பாசனத்தை பொறுத்தவரை களுகங்கை நீரின் ஒரு பகுதியை ஜனரஞ்சன வாவிக்கு வழங்குவதன் ஊடாக குரங்குபாஞ்சான் வரை 5000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பிற்கு விவசாயத்திற்கான நீரை வழங்க முடிவதோடு, அதனால் 45,000ற்கு மேற்பட்ட இப்பகுதி விவசாயிகள் நன்மையடைவர்.

முன்னைய எல்ல – கந்தளாய் நீர்பாசன திட்டத்திற்கு அடுத்ததாக இந்த திட்டமே பாரிய நீர்ப்பாசன திட்டமாக அமையவிருக்கின்றது” என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியபதி கலப்பதி, முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக், அமைச்சின் மேலதிக செயலாளர் டி.எம்.சி. திசாநாயக்க, சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ், கந்தளாய் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஜெஸீல் மௌலவி, ஸ்ரீல.மு.கா. உயர்பீட உறுப்பினர் எம்.எம். முயீஸ் உட்பட கிழக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். Hakeem - 877Hakeem - 876

Comments

புதிது பேஸ்புக் பக்கம்