மஹிந்தவை மாலைதீவுக்கு அழைத்துச் செல்ல முன்னாள் ஜனாதிபதி நசீட் முயற்சி; அங்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரண்டு வீடுகளை வாங்கவும் திட்டம்

🕔 May 24, 2022
மஹிந்தவுடன் மாலைதீவு சபாநாயகர் நசீட்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவையும் அவரின் குடும்பத்தினரையும் மாலைதீவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடன், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகருமான முகமட் நசீட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என ‘தி மோல்டீவ்ஸ் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நசீட் தற்போது இலங்கையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகின்றார் என தெரிவித்துள்ள மோல்டீவ்ஸ் ஜேர்னல், சர்வதேச நிவாரணங்களை ஒருங்கிணைக்கும் விடயத்தில் அனுபவம் இல்லாத போதிலும் அதற்காக அவர் இலங்கை சென்றுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மகிந்த ராஜபக்ஷவை பாதுகாப்பாக மாலைதீவுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார் எனவும் மோல்டீவ்ஸ் ஜேர்னல் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜிநாமா செய்த பின்னர், நசீட்டின் உதவியை நாடினார் என மாலைதீவு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மோல்டீவ்ஸ் ஜேர்னலுக்கு தெரிவித்துள்ளார்.

நசீட்டை தொலைபேசி அழைத்த மஹிந்த, இலங்கையில் பதற்றநிலை தணியும்வரை மாலைதீவில் தானும் குடும்பத்தினரும் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டார் என அந்த அதிகாரி கூறியுள்ளார்.

முதலில் மாலைதீவின் சுற்றுலாத்துறை பெரும் கோடீஸ்வரரான ‘உச்சு’ எனப்படும் சம்பா முகமட் மூசா என்பவரின் இடத்தில் மகிந்த ராஜபக்ஷவை தங்கவைக்க திட்டமிட்டது. நசீட்டுக்கும் மூஸாவுக்கும் நல்ல நெருக்கம் உள்ளது. எனினும் மூசா நம்பமுடியாதவர் என்பதால் நசீட் அதனை நிராகரித்துள்ளார் என மோல்டீவ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

உச்சு’ எனப்படும் மூஸாவுடன் மஹிந்த

இதனையடுத்து இந்தியாவின் சோனு சிவ்தாஸனி என்பவருக்கு சொந்தமான ‘சொனேவா புஷி’ என்ற இடத்திலுள்ள வீட்டை மகிந்த ராஜபக்ஷ வாங்கமுடியும் என்ற யோசனையை நசீட் முன்வைத்துள்ளார். சோனு என்பவர் நசீட்டின் நெருங்கிய நண்பராவார்.

சோனு சிவ்தாஸனி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். 12 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு தனதுதனிப்பட்ட மாளிகையை விற்க அவர் சம்மதித்துள்ளார்.மேலும் இன்னுமொரு மாளிகையையும் 03 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்க தீர்மானித்துள்ளார். அதனை மகிந்தராஜபக்ஷவின் குடும்ப பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்தவுள்ளனர் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

சோனுவுடன் நசீட்

மஹிந்த கொள்வனவு செய்ய தீர்மானித்த மாளிகையானது 06 படுக்கை அறைகளைக் கொண்டதாகும். இது 24000 சதுர அடி பரப்பளவுடையது. இங்கு 12 பெரியவர்கள், 06 சிறியவர்கள் தங்கலாம். இதுதவிர இங்கு நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மஹிந்த கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ள சோனுவின் வீடு

Comments