பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாக கொல்லப்பட்டதை விடவும் மோசமான சம்பவம்; அமரகீர்த்தி எம்.பியின் மரணம் குறித்து அமைச்சர் பந்துல கருத்து

🕔 May 24, 2022

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கடந்த 09ஆம் திகதி வன்முறையாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டமையானது, பாகிஸ்தான் சியல்கொட் நகரில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் ஒருவர் சில காலங்களுக்கு முன்னர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விடவும் மோசமானது என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார். கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.

“நாட்டில் கடந்த 09ஆம் தேதி நடந்த வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் 72 பேரின் வீடுகள் சேதமாக்கி, தீக்கிரையாக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விடவும், இது பாரதூரமான சம்பவமாகும்.

கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 852 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.

இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புபடட்ட 1798 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 900 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 09ஆம் திகதிய வன்முறைச் சம்பவங்களின் போது உள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் வீடுகளும் சேதமாக்கப்பட்டன என்றும், இந்த வன்முறைச் சம்பவங்கள் கண்டிக்கத் தக்கவை” எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஊடகங்கள் – இவ்வாறான வன்முறைகளைத் தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், வன்முறைகளைக் கண்டிக்கும் வகையில் ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் இதன்போது அவர் கேட்டுக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்