விமானப் படையில் அருந்திக எம்.பி பணியாற்றவில்லை: நாடாளுமன்றில் பொய் கூறினாரா?

🕔 May 21, 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெனாண்டோ – விமானப் படையில் பணியாற்றியதாக தெரிவித்த கருத்தை இலங்கை விமானப்படை இன்று மறுத்துள்ளது.

விமானப் படையை டெய்லி மிரர் தொடர்பு கொண்ட போது; நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக – விமானப்படையில் பணியாற்றியமைக்கான எந்தவித பதிவுகளும் இல்லை என, ​​அதன் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வன்முறையின் போது தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதால் தனது வீடு மற்றும் விமானப் படையில் விமானம் செலுத்தியமைக்கான பதிவுகள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக சபையில் தெரிவித்திருந்தார்.

“விமானப் படையிலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிலும் நான் இருந்ததைக் காட்ட இப்போது எதுவும் இல்லை. ஒரு விமானம் புறப்படும்போது, ​​அந்தக் காலத்தில் கணினி மயமாக்கல் வசதி இல்லாததால் அவை பதிவேடுகளில் குறிக்கப்பட்டன. அந்த பதிவுகள் அனைத்தும் எனது வீடு எரிக்கப்பட்டதால் அழிந்து விட்டன” என்று அவர் கூறியிருந்தார்.

ஒருமுறை பறக்கும் திறன் தேர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்றதாகவும், ஆனால் அதில் அவர் சித்தியடையவில்லை எனவும் விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

விமானப் படையில் கேடட் அதிகாரியாக கூட இருந்ததற்கான பதிவுகள் கூட இல்லை என்றும்ட குரூப் கேப்டன் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Comments