பைபிளையோ, குரானையோ, பகவத் கீதையினையோ ஹோட்டலில் வழங்கும் ‘மெனு காட்’ போல் பயன்படுத்த முடியாது: பெண்ணியத்துடன் தொடர்புடுத்தி நளினி கருத்து

🕔 May 22, 2022

– நேர்கண்டவர்: யூ.எல். மப்றூக் –

லைமுடியில்தான் தமது அதிகபட்ச அழகு தங்கியிருக்கிறது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் ‘நீள் கூந்தல்’தான் பெண்ணின் அழகை பூரணப்படுத்துவதாக புராணங்கள் தொடக்கம் சினிமாப் பாடல்கள் வரை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் தனது தலைமுடியை மழித்திருக்கிறார் பிரபல பெண்ணியலாளர் நளினி ரட்னராஜா. ‘மொட்டை’ அவருக்கு இன்னும் அழகைக் கொடுத்திருக்கிறது.

”நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள், அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளும் போது, அவர்களின் தலைமுடிகளை மொத்தமாக இழந்து விடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றார்கள். தமது அழகை இழந்து விட்டதாக அவர்கள் விரக்தியடைகின்றனர். அதனால் அவர்கள் வெளியில் தலை காட்ட தயங்குகின்றனர். இவ்வாறான பெண்களுக்கு நம்பிக்கையளிப்பதற்காகவே நான் மொட்டையடித்தேன்” என்கிறார் நளினி.

மட்டக்களப்பு – கல்லடியைச் சேர்ந்த நளினி, 1986ஆம் ஆண்டிலிருந்து கொழும்பில் வசித்து வருகிறார். நாடறிந்த பெண்ணியல்வாதி, ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ எனும் நிறுவனத்தில் திட்ட ஆலோசகாராகப் பணியாற்றி வருகின்றார். பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் என – இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.   

பெண்ணியம் மட்டுமன்றி, அரசியல், இன முரண்பாடு, சாதியியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஆழ்ந்த அறிவுடன் இவர் பேசுகிறார். தனது இனம், சமூகம் மற்றும் போராட்ட இயக்கங்கள் தொடர்பில் அக விமர்சனங்களை வெளிப்படையாக துணிந்து சொல்கிறார்.

இவரை அம்பாறை மாவட்டம் ஒலுவிலில் ஒரு காலைப் பொழுதில் சந்தித்துப் பேசிய போது பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கு வழங்குகின்றோம்.

கேள்வி: ஒரு பெண்ணியல்வாதியாக எப்போது உங்களை அடையாளம் காண்டீர்கள்?

பதில்: வீட்டுக்குள்ளிருந்து இயல்பாகவே பெண்ணியம் பற்றிய விடயங்களை கற்றுக் கொண்டேன். அம்மாவும் அப்பாவும் பெண்ணியல்வாதிகளாகவே வாழ்ந்தனர். ஆனால், அது பெண்ணியம் என்று அவர்களுக்குத் தெரியாது. அப்படித்தான் நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல ஆண்கள் – பெண்களை மதிக்கிறார்கள், பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன என்று நம்புகிறார்கள், அதன்படி பெண்கள் முடிவுகளை எடுக்க அனுமதிக்கின்றார்கள்.

என்னுடைய பதின்ம வயதுகளில் ஆண் பிள்ளைகளுடன் பேசினால், சிலர் அப்படிப் பேசக் கூடாது என்பார்கள். ஆனால், ஏன் பேசக் கூடாது என்று நான் எதிர்த்து கேட்டிருக்கிறேன்.

பெண்ணியம் பேசுகின்றவர்களில் ஒரு சாரார், உரிமைகள் மறுக்கப்பட்ட குடும்பப் பின்ணயிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், எனது குடும்பம் அப்படியிருக்கவில்லை. எனக்கு இரண்டு அண்ணன்களும், ஒரு அக்காவும் உள்ளனர். எனது அண்ணண்மார் வீட்டு வேலைகளை இயல்பாகவே செய்வார்கள், சமைப்பார்கள்.

ஒரு நாள் எனது அண்ணா ஒருவர் – வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் போது, என்னைத் தேடி எனது நண்பிகள் வந்து விட்டார்கள். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. நண்பிகள் போன பிறகு அண்ணாவுக்கு ஏசினேன். ‘வெட்கமில்லையா, மானம் போய்விட்டது. என்னுடைய நண்பிகள் வரும்போது வேலையை விட்டுப்போட்டு வரத் தெரியாதா’ என்று கேட்டேன். அண்ணா அதற்கு மிகச் சாதாரணமாக பதில் சொன்னார்; ‘உனக்கு என்ன பிரச்சினை? நான் ஏன் சமைக்கக் கூடாது? உனக்கு ஏன் மானம் போகுது? எனக்குப் பசிக்கிறது, நான் சமைக்கிறேன்’ என்றார்.

அண்ணா கூறியது அப்போது எனக்கு விளங்கவில்லை. ‘பசித்தால், சாப்பாடு தேவைப்பட்டால், யாரும் சமைக்கலாம்’ அவ்வளவுதான். அப்போது அது எனக்கு புரியவில்லை. பின்னர் இவைபற்றிய தெளிவு வந்தபோதுதான், வீட்டில் எல்லாம் சரியாகத்தான் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

இந்து கலாசாரத் திருமணத்தின் போது, அம்மி மிதித்து பெண்ணின் கால் விரலில் மாப்பிள்ளை மெட்டி அணிவிப்பார். ஒரு நாள் எனது நண்பியொருவரின் அப்பா பேசிக் கொண்டிருக்கும் போது, இது கூடாது, பெண்ணின் காலை ஆண் தொடுவதா? என வாதிட்டுக்கொண்டிருந்தார். இதை அண்ணாவிடம் நான் சொன்னேன். அப்போது அண்ணா; “அவரின் அம்மாவின் காலை அவர் தொட மாட்டாராமா என்று அவரிடம் கேளு” என்றார். அந்தக் கேள்விக்குள் ஏராளமான அர்த்தங்கள் இருந்தன. அம்மாவின் காலைத் தொட முடியுமென்றால், ஏன் மனைவியின் காலைத் தொட முடியாது? அதில் என்ன கௌரவக் குறைச்சல்? என்பதுதான் அண்ணாவின் கேள்வியாக இருந்தது.

இப்படியான சிந்தனைகள் எனது வீட்டுக்குள்ளேயே எனக்கு புரிதலற்ற காலத்திலேயே எனக்குள் விதைக்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி: நிறுவன ரீதியாக எப்போது இயங்கத் தொடங்கினீர்கள்?

பதில்: சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நிறையவே வேலை செய்தேன். அனைத்து துன்பங்கள், கஷ்டங்கள், இழப்புகளுக்கும் முகம் கொடுக்கக் கூடிய ஆளுமையும் சக்தியும் மனிதர்களுக்குள் உள்ளது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன்.

சுனாமியின் பின்னர் நிறுவனமொன்றில் சமூக உளவியல் சார்ந்து இயங்கும் பதவியொன்று கிடைத்தது. 32 கிராமங்களுக்கு 34 உத்தியோகத்தர்களை வைத்துக் கொண்டு பணியாற்றினேன். இதன் காரணமாக சுனாமியினால் இழப்புகளைச் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களை, அவர்களின் உள நெருக்கீடுகளிலிருந்து வெளியில் கொண்டுவரக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

அதேபோன்று அவர்களுக்கான பௌதீக தேவைகளையும் நாம் செய்து கொடுத்தோம்.

என்னுடைய பலங்களில் ஒன்று, எல்லோருடனும் உறவுகளை வைத்துக் கொண்டு, வலையமைப்புகளை உருவாக்கி அவற்றினைப் பேணி வருவேன். அதுவும் எனது  பணிக்கு உதவியாக இருந்தது. உதாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்தியர் ஒருவரின் சேவை தேவையாக இருந்தால், எனது தொடர்புகளை வைத்து உடனடியாக பெற்றுக் கொடுப்பேன்.

அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த முகாம்களின் நிருவாகங்களை கூர்ந்து கவனித்தபோது, அங்கு பெண்களின் பங்களிப்பு இல்லை என்பதைக் கண்டேன். அங்கு பெண்கள் கூட்டிப் பெருக்கும் வேலைகளில் மட்டுமே இருந்தனர். தீர்மானம் எடுப்பவர்களாக பெண்கள் இருக்கவில்லை. அங்கு இது விடயத்தில் எனது கவனம் கூர்மையடைந்தது.

இந்த இடத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் பெண்கள் தீர்மானம் எடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொண்டேன். பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பும் தேவை, எனவே அவர்களும் வேலைக்குச் செல்தல் வேண்டும் என்பதையும் யோசித்தேன். பெண்கள் உழைத்தால் குடும்ப பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும், நாட்டுக்கும் அது நல்லது.

பெண்கள் வேலைக்குச் சென்று ஆண்களுக்கு உதவியாக இருக்கும் போது, பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் ஆண்கள் உதவியாக இருக்க வேண்டுமல்லவா?

இந்த நாட்டில் முறைசாராத் துறையில் பெண்களின் உழைப்பு அதிகமாக உள்ளது. ஆனால், நாட்டின் தேசிய வருமானத்தில் அவை சரியாகக் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

52 சதவீதம் பெண்கள் சனத்தொயைக் கொண்ட இந்த நாட்டில், ஊழியப்படையில் 30 வீதமான பெண்களே உள்ளனர். மிகுதிப் பெண்களும் தொழில் துறையில் பயன்படுத்தப்பட்டால் இந்த நாட்டின் வருமானம் இன்னும் அதிகரிக்கும்.

ஆண்களுக்குச் சமமாக பெண்களும் வேலைக்குச் செல்லும் நாடுகள்தான் உலகில் அபிவிருத்தியடைந்துள்ளன.

கேள்வி: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட்’ (Search for common ground) நிறுவனத்தில் எப்போது இணைந்தீர்கள்? அதன் பணிகள் என்ன?

பதில்: 2020இல்தான் இணைந்தேன். முரண்பாடுகளை வன்முறையின்றித் தீர்த்து வைப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதுதான் ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட்’ நிறுவனத்தின் பணியாகும்.

முரண்பாடுகள் நல்லதுதான். ஆனால் அவற்றினைத் தீர்ப்பதற்காக வன்முறையைக் கையில் எடுக்கவேண்டிய தேவை கிடையாது.

எமது நிறுவனம் 38 நாடுகளில் இயங்குகின்றது. அந்த நாடுகள் போரினாலோ அல்லது ஆயுத போராட்டங்களினாலோ பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. மியன்மார், லெபனான், மஸிடோனியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் எமது நிறுவனம் பணியாற்றுகின்றது.    

உதாரணமாக ஆயுதப் போராட்டம் முடிவடைந்துள்ள நமது நாட்டில், மீண்டும் சமூகங்களிடையே முரண்பாடுகள் வராமல் தடுப்பதும், முரண்பாடுகள் ஏற்படும் போது அவற்றினை வன்முறையின்றித் தீர்த்து வைப்பதும் எமது நிறுவனத்தின் பணியாகும்.

குறிப்பாக முரண்பாடுகளை வன்முறையின்றித் தீர்த்து வைப்பதானால், தீர்மானம் எடுப்பவர்களாக பெண்களும் இருக்க வேண்டும். அதற்காகத்தான் ‘சமாதான நல்லிணக்கத்தில் பெண்கள்’, ‘அரசியலில் பெண்களை வலுவூட்டுதல்’ போன்ற வேலைத் திட்டங்களை ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட்’ இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது.

இந்தத் திட்டங்கள் அம்பாறை மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுகிறன. இங்கு மூவின மக்களும் வாழ்கின்றனர். கடந்த காலங்களில் மூன்று சமூகத்தவர்களிடையேயும் வன்முறைகள் நடந்துள்ளன. அதன்போது அதிகளவில் ஆண்களே இறந்துள்ளனர். ஆனால், அந்த இழப்பை வாழ்க்கை முழுவதும் சுமப்பவர்களாக பெண்களே உள்ளனர்.

எனவே பெண்கள் உள்ளுராட்சி சபைகள் தொடக்கம் நாடாளுமன்றம் வரை, அதிகளவில் பிரதிநிதிகளாக வரும் போது, வன்முறைக் கலாசாரம் குறையும். காரணம் ஒப்பீட்டு ரீதியாக பெண்கள் வன்முறையை நாடுவதில்லை. பெண்கள் மென்மையானவர்கள், கருணையுள்ளவர்கள் என்றுதானே சமூகம் முத்திரை குத்தி வைத்துள்ளது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

ஆண்களை வீரர்கள் என்றும் பெண்களை மென்யானவர்கள் எனவும் சொல்லிச் சொல்லியே நமது சமூகங்கள் வளர்த்து விட்டுள்ளன. உண்மையில் இது உடல் சார்ந்த விடயங்களல்ல. கருத்தியல் சார்ந்த விடயங்களாகும்.   

பெண்கள் அரசியலுக்குள் வரும்போது ஒப்பீட்டளவில் ஊழலும் குறைவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஆனால், அரசியல் கட்சிகளில் தீர்மானம் எடுக்கும் இடத்தில் பெண்கள் இல்லை.  

கேள்வி: ஆணுக்குப் பெண் சமமில்லை என்கிற கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: பெண்ணும் ஆணும் உடல் ரீதியாக வித்தியாசமானவர்கள்தான். ஆனால் மனிதர்களாக அவர்கள் சமமானவர்கள். அதனால், ஆண்களுக்குக் கொடுக்கப்படுவதற்கு சமனான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் பெண்ணுக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.

பாரபட்சம் காட்டக் கூடாது. ‘மிட் வைஃப்’ உத்தியோகத்துக்கு பெண்கள்தான் நியமிக்கப்படுகின்றனர். ஏன் ஆண்களை நியமிக்கக் கூடாது. அதேவேளை விஒஜி (மகப்பேற்று நிபுணர்) களாக நிறையப் பேர் ஆண்களாகவே உள்ளனர். தாதியர்களாக 96 வீதம் பெண்கள்தான் நியமிக்கப்படுகின்றனர், 04 வீதமான ஆண்களுக்கே இந்தத் தொழில் வழங்கப்படுகிறது. ஏன் ஆண்களை இதில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. பொதுசுகாதார பரிசோதகர்களாக ஆண்கள்தான் நியமிக்கப்படுகின்றனர். இந்தத் தொழிலை ஏன் பெண்களுக்கு வழங்கக் கூடாது. தபால்காரர்களாக ஏன் பெண்களை எடுப்பதில்லை?.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் – தாயை இழந்த பிள்ளைகளை மிகவும் கருசணையுடன் அன்பாக வளர்த்தெடுத்த எத்தனையோ தந்தையர்களையும் நாம் கண்டிருக்கிறோம்.

மரபுவழியாக பெண்கள் செய்து வரும் வேலைகளை செய்கின்ற பல ஆண்கள் இருக்கின்றார்கள். பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுத்து, அவர்களின் உடுப்புகளைக் கழுவி, படிப்பிக்க வைத்து வளர்த்தெடுத்த எத்தனையோ ஆண்கள் இருக்கின்றார்கள். அவர்களை நம்மவர்கள் ‘தாயுமானவர்’ என சொல்லத் தொடங்கி விடுவார்கள். பெண்ணுக்கென்றும் ஆணுக்கென்றும் வேலைகளைப் பிரித்து வைக்கத் தேவையில்லை.

கேள்வி: பெண்ணியல்வாதிகளில் அநேகமானோர் ஆண் எதிர்ப்பு அல்லது வெறுப்பு மனநிலை கொண்டவர்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், நீங்கள் ஆண்களையும் உயர்வான இடத்தில் வைத்துப் பேசுகிறீர்கள்.

பதில்: பெண்ணியம் என்பதை சரியாகப் புரியாதவர்கள்தான் ஆண் வெறுப்பு மனநிலையுடையவர்களாக இருக்கின்றனர்.

அதேவேளை பெண்ணியம் பேசுகின்றவர்கள் உலகம் முழுவதும் விமர்சிக்கப்படும் நிலையொன்றும் உள்ளது.

ஆண்களுக்கென உருவாக்கி வைக்கப்பட்டுள்ள சௌகரியங்களை பெண்ணியல்வாதிகள் உடைத்து விடுவார்களோ என்கிற பயம் ஆண்களுக்குள் உள்ளது. அப்படி உடைக்கப்பட்டால் ஆண்களுக்கான சலுகைகள் இல்லாமல் போய்விடும் என்பதுதான் ஆண்களின் பயமாகும். குசினிக்குள் சென்று சமைப்பதற்கு பெரும்பாலான ஆண்கள் தயாராக இல்லை.

அதனால் பெண்களுக்கான உரிமைகளை பேசுகின்றவர்களைப் பார்க்கும் ஆண்களில் பெரும்பாலானோர் பயப்படுகின்றனர். “நீங்கள் குழப்பத்தை உண்டுபண்ணப் பார்க்கிறீர்கள்” என்று, பெண்ணியல்வாதிகளைப் பார்த்து ஆண்கள் பேசுவது அதனால்தான்.

‘நான் இப்போது வீட்டில் ராஜா மாதிரி இருக்கிறேன். எல்லா வேலைகளையும் பெண் செய்கிறாள், அவளுக்குத் தெளிவு வந்து விட்டால், எனக்கான சௌகரியங்கள் இல்லாமல் போய்விடும்’ என்கிற பயத்தினால்தான், பெண்ணியம் பேசுகின்றவர்களை பல ஆண்கள் எதிர்க்கின்றனர்.

பெண்ணியம் பேசுகின்றவர்கள் போர் செய்யவில்லை, வன்முறையில் ஈடுபடவில்லை, யாரையும் கடத்தவில்லை, கொலை செய்யவில்லை. அப்படியென்றால், ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுகின்றீர்கள்?

பல ஆண்கள் தங்கள் மகளுக்கு எல்லா வகையான உரிமைகளையும் வழங்குகின்றனர். மகளை வேலைக்கு அனுப்புகின்றனர். ஆனால், தனது மனைவிக்கு அந்த உரிமைகளை வழங்குவதில்லை. காரணம், அப்படி வழங்கினால் தனக்கான சௌகரியங்களும், வசதி வாய்ப்புகளும் இல்லாமல் போய்விடும் என்று பயப்படுகின்றனர்.

பெண்ணியல்வாதம் என்பது ஆணாதிக்கக் கட்டமைப்புக்கு எதிரானதே தவிர, ஆண்களுக்கு எதிரானதல்ல. ஆனாலும், ஆணாதிக்கக் கட்டமைப்புக்குள்தான் அதிகமான ஆண்கள் வளர்க்கப்பட்டுள்ளனர். அதனால், அதுபற்றி சரி – பிழைகளை அவர்கள் அறிவதில்லை. எனவே, இதுபற்றி ஆண்களுக்கு சொல்லிக் கொடுத்தல் வேண்டுமே தவிர, ஆண்களை எதிர்த்து – வெறுத்தல் கூடாது. சில அரை வேக்காட்டுப் பெண்ணியல்வாதிகள் – பெண்ணியம் என்பதை பிழையாக விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆண்களுக்கென்று ஒன்றையும் பெண்களுக்கென்று இன்னொன்றையும் பிரித்து வைத்திருக்கும் சமூகக் கட்டமைப்பு உடைய வேண்டும். அப்போதுதான் இந்த நாடும் வளர்ச்சியடையும்.

கேள்வி: மத, சமய நம்பிக்கைகளை மிதித்து, அதனூடாகவே பெண்ணியம் என்பதை வெளிப்படுத்துகின்றவர்களின் நடத்தைகள்தான், பெண்ணியத்துக்கு சமூகத்தில் அதிகம் எதிர்ப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கிறதா?

பதில்: பெண்கள் என்றால் ‘இப்படி’யும், ஆண்கள் என்றால் ‘இப்படி’யும்தான் இருக்க வேண்டும் என்கிற சமூகக் கட்டமைப்பில் மதங்கள் – பாரிய செல்வாக்கினை செலுத்துகின்றன.

எல்லா மதத்தின் தலைவர்களும் ஆண்களாகவே இருக்கின்றனர். அதனால் பெண்களை அடக்குவதற்கென்றே மதங்களில் சில கூறுகள் உள்ளன. அந்தக் கூறுகள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.

ஆனால், நல்ல விஷயங்களும் மதங்களில் உள்ளன. ‘பெண்கள் – கணவனுக்கு எல்லாவற்றிலும் அடிபணிய வேண்டும்’ (Wife should submit to their husband everythings) என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும். கணவன் குடித்து விட்டு வந்து மனைவியை அடிக்கிறான், உதைக்கிறான், கொடுமைப்படுத்துகிறான். இவனுக்கு எல்லாவற்றிலும் எப்படி மனைவி அடிபணிய முடியும். எனவே, இதனை நாம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

அதே பைபிளில் ஆண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை ஆண்கள் தூக்கிப் பிடிக்க மாட்டார்கள். பைபிளையோ, குரானையோ, பகவத் கீதையினையோ ஹோட்டலில் வழங்கும் ‘மெனு காட்’ போல் பயன்படுத்த முடியாது. இவற்றிலிருந்து தமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றவற்றினை விட்டு விடுகின்றனர். ஆனால், அப்படி மத நூல்களை பயன்படுத்த முடியாது.

சமயங்களில் விடயங்கள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்ற போதும், ஆணாதிக்கக் கட்டமைப்புக்கு அமைவாக சிலவற்றினை மட்டும் தெரிவுசெய்து அவற்றினை ஆண்கள் முன்வைக்கின்றனர். அது கூடாது.

ஆண் – பெண் சமத்துவம் என்பது நம்முடைய சமய, சம்பிரதாய, சடங்குகளிலும், கலாசாரங்களிலும், கொள்கைகளிலும், திட்டங்களிலும் இருக்க வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமனாக நடத்தப்பட வேண்டும். எல்லா உரிமைகளையும் எல்லோரும அனுபவிக்க வேண்டும்.

அப்படி நடக்கும் போதுதான் நமது நாடு உண்மையான அபிவிருத்தியினையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பெற்றுக் கொள்ளும்.

கேள்வி: வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: எனக்கு ஓர் ஆசை இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும், 30 வருடங்களுக்கு முன்னர் எப்படி வாழ்ந்தார்களோ, அப்படி வாழ வேண்டும். எனது ஆயுளுக்குள் அதனை நான் பார்த்து விட வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்