
இலங்கையில் கடந்த 09ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்த நாட்களிலும் நடைபெற்ற பாரியளவிலான வன்முறைகளுக்குப் பின்னர், இன்று (17) நாடாளுமன்றம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
இதன்போது கடந்த 09ஆம் திகதி நடந்த வன்முறையில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள மரணமடைந்தமை குறித்து தனது கவலையைத் தெரிவித்த சபாநாயகர், மரணித்த நாடாடளுமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரினார்.
சபாநாயகர் தனது அறிவிப்பில் “மரணித்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள” என தெரிவித்த போது சபையில் குறுக்கிட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ”மரணம் அல்ல கொலை” என சத்தமாக கூறினர்.
இதனையடுத்து சபாநாயகரும் “கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள” எனக் குறிப்பிட்டார்.
சபாநாயகரின் கோரிக்கையை அடுத்து, காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 09ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி வருகின்றவர்கள் மீது, காலிமுகத் திடலில் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியமையினை அடுத்து, அரசாங்க எதிரப்பாளர்கள் பதில் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
இதன்போது அரசாங்க எதிர்ப்பாளர்களிடம் சிக்கிய ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்டதாக அப்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
ஆயினும், அமரகீர்த்தி அத்துக்கோரளவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என, பொலிஸ் பேச்சாளர் கூறியிருந்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்தியின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் எவையும் இல்லை எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.



