
புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை பொதுஜன பெரமுன கட்சியி பிரேரித்திருந்தது.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி – பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை முன்மொழிந்தது.
பிரதி சபாநாயகராக பெண் எம்.பி ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது.
இதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை ஆளுந்தரப்பு பரிந்துரைத்தது.
இதனையடுத்து சபையில் உரையாற்றிய பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே; பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் பரிந்துரைத்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் நியமனத்தை தாங்கள் அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகவுள்ள 10 கட்சிகளின் எம்.பிகள், பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பாக வாக்கெடுப்பை நடத்துவதைத் தவிர்க்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
வாக்களிப்பதற்காக நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காமல், கட்சித் தலைவர்களையும், பிரதமரையும் கூட்டி ஒரு முன்மொழியப்பட்ட பெயரை முடிவு செய்யுமாறு சபாநாயகரைக் கேட்டுக் கொண்டனர்.
இருந்தபோதும் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் பிரதி சபாநாயகர் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. ஆயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வேளையில் மௌனமாகவே காணப்பட்டார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்ற போதிலும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ரகசிய வாக்கெடுப்பை முன்னெடுத்தார்.
இந்த வாக்கெடுப்பின் பிரகாரம், அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளையும், ரோஹினி கவிரத்ன 78 வாக்குளையும் பெற்றிருந்தனர்.



