இன விடுதலை வேண்டி, பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை மக்கள் பேரணி இன்று ஆரம்பம்

🕔 May 15, 2022

– பாறுக் ஷிஹான் –

ன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அம்பாறை மாவட்டம் – பொத்துவில்லில் ஆரம்பமாகியது.

இப்பேரணியை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இன்று ஆரம்பிக்கப்படும் இப்பேரணியானது பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று ,காரை தீவு, கல்முனை, களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி காத்தான்குடி வீதி வழியூடாக கல்லடி பாலத்தினை சென்றடையும்.

அதனைத் தொடர்ந்து நாளை (16)ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து செங்கலடி, வாழைச்சேனை, வாகரை வழி ஊடாக திருகோணமலை சிவன் கோவில் முன்றலினை சென்றடையும்.

நாளை மறுநாள் (17) காலை திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, நிலாவெளி ஊடாக தென்னை மரவாடியை சென்றடைந்து வவுனியா நெடுங்கேணி வீதி வழியாக முல்லைத்தீவைச் சென்றடையும்.

தொடர்ந்து 18ஆம் திகதி அன்று வடமாகாணத்தில் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பேரணியுடன் இணைந்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலை சென்றடையவுள்ளது.

‘முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு கடந்த 12ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினைவு கூறப்பட்டு வரும்வேளை, இப் பேரணியானது மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மதகுருமார்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்