இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம்

🕔 March 17, 2022

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பு 26462 ரூபா) மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், ‘இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான கடனுதவிகள் வழங்க கையெழுத்தாகியுள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (15) இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்; ‘இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்கான திட்டங்கள் முன்னெடுப்பு குறித்து பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினார்.

இந்தியாவின் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் அண்டை நாடுகள் கொள்கையில் இலங்கை முக்கிய பங்காற்றுவது குறித்தும் இந்திய பிரதமர் பேசினார்.

மேலும் இலங்கை மக்களுடன் இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

அதேபோல, இருநாட்டு சுற்றுலாப் போக்குவரத்துகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் மோடி உரையாடினார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி; “இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததில் மகிழ்ச்சி, இருநாட்டு பொருளாதார கூட்டு நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் முதலீடு வலுப்பெறுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, பசில் ராஜபக்டிவுடனான சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘பொருளாதார கூட்டணி குறித்து பயனுள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து செயாலாற்றும்’ என்று தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்