பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு

🕔 March 14, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

நாட்டில் 367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடுகள்) சட்டத்தின் படி, நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் 367 பொருட்களுக்கு இவ்வாறு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 10ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்தக் கட்டுப்பாடுகளை அறிவித்து, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ – வர்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள், மீன் வகைகள், பழங்கள் மற்றும் பழப்பானங்கள், நீர், மோல்ட் (Malt) இல் இருந்து தயாரிக்கப்பட்ட பியர், மதுபான வகைகள், பதப்படுத்ப்பட்ட உணவுகள்,சாக்லேட், பாஸ்தா, சிகரட் உற்பத்திகள், அழகு சாதனப் பொருட்கள், பல் சுகாதாரம் தொடர்பான தயாரிப்புகள், ஈரம் துடைப்பான்கள், மெழுகுவர்த்திகள், ரப்பர் பொருட்கள், தோல் பொருட்கள், பயணப் பைகள், தரை விரிப்புகள், பற்றிக் மற்றும் கைத்தறி தவிர்ந்த ஆடைகள் மற்றும் காலணிகள், தொப்பிகள், குடை, சீப்பு, பீங்கான் (செரமிக்) மற்றும் கண்ணாடிப் பொருட்கள், மின்சாதனமற்ற வீட்டு உபயோகப் பொருட்கள், சமயலறைப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள், மோனிட்டர், ப்ராஜக்டர் மற்றும் அவற்றுக்கான பாகங்கள், மூக்குக் கண்ணாடி, கைக்கடிகாரம், சுவர்க்கடிகாரம் மற்றும் இசைக்கருவிகள், இருக்கைகள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை மேற்படி 367 பொருட்களில் அடங்குகின்றன.

இவற்றை ‘அத்தியவசியமற்றவை’ என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக, சிறிது காலத்துக்கு மேற்படி பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தப் பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மூன்று வகையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

முதல் முறையின்படி, குறிப்பிட்ட சில இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். இரண்டாவது முறையின் கீழ் – சில பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும். மூன்றாவது முறையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிப்பதற்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் பொருளாதார நிலையை சிறந்த முறையில் முகாமை செய்து, சிறந்த நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கு, இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் செயல்முறையானது உதவும் என, பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை?

இந்த நிலையில், மாற்றுவழிகளை சிந்திக்காமல் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். அப்துல் ரஊப் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தலைமைப் பேராசிரியர் ரஊப்

மாற்று வழிகளையும் திட்டங்களையும் செய்து விட்டுத்தான் இவ்வாறான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ‘அனுமதிப்பத்திரங்களைப் பெறவேண்டும்’ என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமையின் மூலம், தமக்கு விரும்பிய சிலருக்கு மட்டும் இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்க முயற்சிக்கலாம் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

இதனால், இந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமை ஒருவர் அல்லது சிலருக்கு மட்டும் கிடைக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலை ஏற்பட்டால், அவ்வாறான இறக்குமதியாளர்கள் தீர்மானிப்பதே அந்தப் பொருட்களுக்கான சந்தை விலையாக மாறும் நிலை உருவாகும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொருட்களை ‘அத்தியவசியமற்றவை’ என அரசாங்கம் – எந்த வகையில் தீர்மானித்துள்ளது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாட்டில் மிக நீண்ட நேரம் மின்வெட்டு அமலில் உள்ள நிலையில், மெழுகுவர்த்திகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டினை அரசாங்கம் விதித்துள்ளமையினை அறிவுபூர்மான தீர்மானம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

“விரைவில் முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருகிறது. அப்போது அவர்களுக்கு ஈச்சம்பழம் அத்தியவசியமாகத் தேவைப்படும். ஈச்சம்பழம் என்பது முஸ்லிம் சமூகத்தின் சமய, விழுமியங்களுடன் சம்பந்தப்பட்டதாகும். ஈச்சம்பழத்தை அத்தியவசியமற்ற பொருளாகக் கூறி, அதற்கு இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,” எனவும் பேராசிரியர் ரஊப் கூறினார்.

ஈச்சம்பழம்

மேற்படி இறக்குமதிப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்தவர்கள், தற்போதைய நிலையில் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், தமது வியாபாரங்களை கைவிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் எனவும் கூறிய பேராசிரியர் ரஊப், “அவர்களுக்கு வேறு தொழில்களை உடனடியாகச் செய்வதற்கான மாற்று வழிகள் பெரும்பாலும் இல்லை” என்றார்.

“இறக்குமதிப் பொருட்கள் மீது மக்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையிலும், உள்நாட்டுப் பொருட்கள் மீது மக்களுக்கு விருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் அரசு – வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் சட்டங்களை இயற்றி இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வதன் மூலமாக, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியானது மேலும் சிக்கல் நிறைந்ததாகவே மாறும்” எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, இவ்வாறான பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம், அந்நியச் செலாவணிக் கையிருப்பினை பெருமளவில் பேண முடியாது எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

“கொவிட் தொற்று ஏற்பட்ட பின்னர் இவ்வாறான பொருட்களின் இறக்குமதிகளுக்கென பெருந்தொகையான பணம் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. கொரோனா தொற்றுக்குப் பின்னர் பொருளாதார சிக்கல்கள், வியாபார மந்தநிலை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் வீழ்ச்சிப் போக்குகள் காணப்படுகின்றமையினால், மேற்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் இறக்குமதிகளுக்கு பாரியளவான நிதி செலவிடப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குரியதாகும்” எனவும் தலைமைப் பேராசிரியர் ரஊப் மேலும் தெரிவித்தார்.

3200 ரூபா கொட்டன் ஷல்வார், இப்போது 5500 ரூபா

இந்த நிலையில், மேற்படி பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக, ஆடை மற்றும் புடவை விற்பனையாளர்கள் தமது தொழிலில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருது பிரதேசத்தில் 66 வருடங்களாக இயங்கிவரும் ‘மஜீதியாஸ்’ ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஏ.எம்.எம். பசீல், தற்போதுள்ள வரிகள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடு போன்றவை தமது தொழிலில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

பசீல் – மஜீதியாஸ் உரிமையாளர்

“கொரோனா காரணமாக எனது தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்குக் கூட, பெரும் கஷ்டத்தை எதிர்கொண்டோம்.1956ஆம் ஆண்டு எனது தந்தை ஆரம்பித்த வியாபார நிறுவனத்தை இப்போது நான் நடத்திக் கொண்டிருக்கின்றேன். கொரோனா தாக்கத்திலிருந்து ஓரளவு மீண்டெழும் போது, தற்போது இந்த இறக்குமதிக் கட்டுப்பாடு வந்துள்ளது” என அவர் கூறுகின்றார்.

“மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தாமல் வரியை அறிவித்து விடுகிறார்கள். இதனை நாம் மக்களுக்கு புரிய வைப்பதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது”.

“விரைவில் சித்திரைப் பெருநாள், நோன்புப் பெருநாள் வரவுள்ளன. இதன்போது மக்கள் புத்தாடைகளை எடுக்க கடைக்கு வருவதற்கு முன்னர், தற்போதுள்ள வரிப் பிரச்னைகள் குறித்து விளங்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. வியாபாரம் செய்வது பெரும் போராட்டமாக மாறிவிட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தியா மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்து, அவற்றினை நாட்டுக்கள் எடுக்கும் போது, சுங்க வரி மிக அதிகளவில் விதிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து அண்மையில் ஆடைகளை இறக்குமதி செய்தோம். அப்போது வரி அதிகரிப்பு இருக்கவில்லை. இறக்குமதி செய்த ஆடைகளை நேற்று வெளியில் எடுக்கும் போது சுங்க வரி அதிகரித்துள்ளது”.

“முன்னர் ஒரு ‘டெனிம்’ காற்சட்டைக்கு 425 ரூபா சுங்க வரி விதிப்பார்கள். ஆனால் நேற்றைய தினம் அதே ஆடைக்கு திடீரென 680 ரூபா சுங்க வரி என்கிறார்கள். நாங்களும் பெருந்தொகையான ஆடைகளை இறக்குமதி செய்து விட்டோம். எனவே, அவர்கள் சொல்லும் வரியைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்” என்றார்.

“1500 ரூபாவுக்கு விற்க வேண்டிய ‘சேர்ட்’ ஒன்றினை தற்போது 2800 ரூபாவுக்கு விற்க வேண்டியுள்ளது. முன்னர் ‘பாம்பே கொட்டன் ஷல்வார்’ ஒன்றினை 3200 ரூபாவுக்கு விற்க முடிந்தது. ஆனால் அதே ஆடையொன்றுக்கு தற்போது 5500 ரூபா ஆகிறது. அத்தியவசியமற்ற பொருட்கள் எனக்கூறியே ஆடைகளுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆடை வகைகளும் அத்தியவசியமானவைதான்” என பசீல் மேலும் தெரிவித்தார்.

பெரும் பாதிப்புக்குள்ளான பழ வியாபாரம்

ஆப்பிள், திராட்சை, ஒரேன்ஞ், ஈச்சம்பழம், அன்னாசி, அவகாடோ, அத்திப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் மற்றும் பியர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களும், மேற்படி இறக்குமதி கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்ட பொருள்களுக்குள் உள்ளக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பழ வியாபாரிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சாதாரண வருமானத்தைக் கொண்டவர்கள் இவ்வாறான பழங்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலைவரமும் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 08 வருடங்களாக பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எல்.எம். சனூன் இது குறித்து பிபிசி தமிழுக்குப் பேசினார்.

சனூன்

சாதாரணமான காலத்தில் 50 ரூபா விற்கப்பட்ட ஆப்பிள் ஒன்றை தற்போது 120 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும், நாளை அல்லது நாளை மறுநாள் புதிதாக இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் ஒன்றினை 190 ரூபாவுக்கு விற்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாகவும் சனூன் கூறுகின்றார்.

“இந்த விலை உயர்வு காரணமாக, எனது வியாபாரத்தை நடத்துவது பெரும் சவாலாகவுள்ளது. வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வழமையாக 4 ஆப்பிள் வாங்கிச் செல்லும் எமது வாடிக்கையாளர்கள் இப்போது 2 மட்டுமே வாங்குகின்றனர். இன்னும் விலையேற்றம் ஏற்படும் போது, இரண்டு வாங்க நினைப்பவர்கள், ஒன்றைத்தான் வாங்கிச் செல்லும் நிலை ஏற்படும்” என்றார்.

இதேவேளை, ஈச்சம்பழத்துக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு அறிவிப்பு வெளியானதை அடுத்து, சந்தையில் அதிகமானோர் ஈச்சம்பழத்தைப் பதுக்கி வைத்து விட்டதாகக் கூறும் அவர்; 350 ரூபாவுக்கு விற்பனையான சாதாரண ஈச்சம் பழம், தற்போது 800 அல்லது 900 ரூபாவுக்கு விற்கப்படுவதாகக் கூறினார்.

“குழந்தைகளுக்கு பழங்களை அவசியமாக கொடுக்க வேண்டும். அதைச் சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ஆனால் விலை உயர்வு காரணமாக பழங்களை குழந்தைளுக்குக் கூட வழங்க முடியாத நிலை ஏற்படுமானால், அவர்கள் போஷாக்கு அற்றவர்களாக மாறுவார்கள். எதியோப்பியா, சோமாலியா நாட்டிலுள்ள குழந்தைகள் போல், நமது நாட்டுக் குழந்தைகளும் போஷாக்கற்றவர்களாக மாறும் அபாயம் உள்ளது” என சனூன் அச்சம் தெரிவித்தார்.

எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியே ஆக வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்