ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு

🕔 March 8, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

லுவில் துறைமுகம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட போதும், இது வரை கப்பல் ஒன்று கூட – வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 56 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருகின்றது.

இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமொன்றுக்கு இலங்கை துறைமுக அதிகார சபை வழங்கிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம், அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவிலில் துறைமுகம் அமைவதை பிரகடனப்படுத்தினார். இதனையடுத்து 2008 ஆம் ஆண்டு ஜுலை மாதம், ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2013 செப்டம்பர் 01ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒலுவில் துறைமுகத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

ஆயினும், இதுவரையில் இந்தத் துறைமுகத்துக்கு ஒரு கப்பல் கூட வந்து போகவில்லை. துறைமுகத்தின் பல கட்டடங்கள் சிதைவடைந்துள்ளதோடு, ஆங்காங்கே புதர்களும் வளர்ந்து காணப்படுகின்றன.

ஒலுவில் துறைமுக நிர்மாணத்துக்காக டென்மார்க் அரசிடமிருந்து 46.1 மில்லியன் யூரோவினை இலங்கை அரசு வட்டியில்லாக் கடனாகப் பெற்றது. (இதன் இன்றைய இலங்கைப் பெறுமதி சுமார் 1022 கோடி ரூபாவாகும்). வர்த்தகத் துறைமுகம் மற்றும் மீன்பிடித் துறைமுகம் என, ஒலுவில் துறைமுகத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. மீன்பிடித் துறைமுகம் 2013ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வந்த போதிலும், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மீன்பிடித் துறைமுகத்தின் ‘வாய்’ பகுதியில் அடிக்கடி மணல் அடைத்து விடுவதால் துறைமுகத்துக்குள் படகுகள் வந்து போக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ‘வாய்’ பகுதியை அடைக்கும் மணலை மீனவர்கள் அடிக்கடி அகற்றி வந்த போதிலும், ஒரு கட்டத்தில் அவர்களால் அதனைச் செய்ய முடியாத நிலை உருவானது. துறைமுக அதிகார சபையும் அந்த மணலை ஒரு கட்டத்தில் அகற்றிக் கொடுக்காமையினால், மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

ஒலுவில் துறைமுகம் 66 ஹெக்டயர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் வர்த்தகத் துறைமுகம் 38 ஹெக்டயர் நிலைப்பரப்பினையும், 15 ஹெக்டயர் கடல் பரப்பினையும் கொண்டுள்ளது.

இந்தத் துறைமுக நிர்மாணத்துக்காக, ஒலுவில் மற்றும் அதனை அண்டிய பாலமுனை பகுதிகளைில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 125 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இதற்காக, காணிச் சொந்தக்காரர்களுக்கு 7 கோடி 71 லட்சத்து 55 ஆயிரத்து 662 ரூபா இதுவரையில் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது என்று, துறைமுக அதிகார சபை தெரிவிக்கின்றது. இருந்தபோதிலும், காணிகளை இழந்த சிலர் தமக்கு இன்னும் நஷ்டஈடு கிடைக்கவில்லை என்கின்றனர்.

மீன்பிடித் துறைமுகம்

ஒலுவில் வர்த்தகத் துறைமுகம் பயனற்ற நிலையில் காணப்படுகின்ற போதிலும், மீன்பிடித் துறைமுகமானது கடற்றொழிலாளர்களுக்கு பேருதவியாக அமைந்திருந்தது. இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் இங்கு தரித்து நின்று தொழிலுக்குச் சென்று வந்தன. கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தழிப்பு ஏற்படும் போது படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்தில் தரித்து வைக்கவும் முடிந்தது.

மீன்பிடித் துறைமுகம் இயங்கிய போது எடுக்கப்பட்ட படம்

2013ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கு பல்லாயிரக் கணக்கான மீன்பிடிப் படகுதகள் வருகை தந்திருந்தன. அந்த வகையில் பலநாட்கள் பயணம் செய்யும் மீன்பிடிப் படகுகள் (30 – 60 அடி நீளமானவை) 5610 வருகை தந்தன. அதே காலப்பகுதியில் 1739 சிறிய மீன்பிடிப் படகுகளும், ஒருநாள் பயணம் செய்யும் 1748 மீன்பிடிப் படகுகளும் வந்ததாக துறைமுக அதிகார சபை தெரிவிக்கின்றது.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் இயங்கிய காலப் பகுதியில், அம்பாறை மாவட்டத்தில் மீன் உற்பத்தியும் அதிகாரித்திருந்ததாக, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் கல்முனை மாவட்ட அலுவலகம் தெரிவிக்கின்றது. 2013ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில் கடல் மீன் உற்பத்தி 23,483.67 மெட்ரிக் டன் ஆகவும், 2017ஆம் ஆண்டு 20176.51 மெட்ரிக் டன் ஆகவும் காணப்பட்டது. ஆனால் மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்ட பின்னர் 2019ஆம் ஆண்டு 11,715.76 மெட்ரிக் டன் மீன்களும், 2020ஆம் ஆண்டு 7995.43 மெட்ரிக் டன் அளவான மீன்களுமே கிடைத்துள்ளன.

ஒலுவிலில் உள்ள மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டமையினால் இந்தப் பிரதேசத்திலுள்ள ஒருநாள் பயணம் செய்து மீன்பிடியில் ஈடுபடும் தமது படகுகளை கடற்கரையிலேயே மீனவர்கள் தரித்து நிற்கச் செய்கின்றனர்.

இதன் காரணமாக கடற்கொந்தழிப்பு மற்றும் கடுமையான காற்று காரணமாக பல படகுகள் கடந்த காலங்களில் சேதமடைந்துள்ளதாக இப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, கரையிலிருந்து படகுகளை கடலுக்குள் தள்ளும்போது தாம் பாரிய கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பு

ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டமையினால் மக்களுக்கு எந்தவிதப் பயன்களும் கிட்டாத நிலையில், துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர் இப் பிராந்தியத்தில் கடுமையான கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலரிப்பைத் தடுப்பதற்காக பாரிய பாறாங்கற்கள் ஒலுவில் கடற்கரையோரங்களில் போடப்பட்டுள்ள போதிலும் கடலரிப்பை முற்றாகத் தடுக்க முடியவில்லை. ஒலுவிலுக்கு அடுத்துள்ள நிந்தவூர் பிரதேசத்தில் பெரும் நிலப்பரப்பை கடலரிப்பு காவு கொண்டுள்ளமையை காண முடிகிறது.

ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னரே, இந்தப் பிராந்தியத்தில் இவ்வாறு தீவிர கடலரிப்பு ஏற்பட்டுள்ளது என்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கே. நிஜாமிர் பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

துறைமுக நிர்மாணத்தின் பின்னர் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் தென்னந்தோப்புகளும் அழிவடைந்துள்ளன.

இந்தப் பின்னணியில் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினை மீண்டும் இயங்கச் செய்ய முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்