அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார்

🕔 March 4, 2022

விமலும், கம்மன்பிலவும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வருகை தந்தால், தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரப் போவதில்லை என – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியமையினாலேயே, தம்மை அமைச்சர் பதவிகளிலிருந்து ஜனாதிபதி நீக்கியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.

“எல்லா சந்தரப்பங்களிலும் தனது குடும்பத்தவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிவது போன்று, இதன் போதும் தனது சகோதரர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு வர வேண்டும் என்பதற்காக, ஜனாதிபதி எம்மை பதவி நீக்கியுள்ளார்” எனவும் விமல் குறிப்பிட்டார்.

இருந்தபோதும் தாம் பதவி நீக்கப்பட்ட தீர்மானத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த விமல் வீரவன்ச; தன்னை பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், நடந்த விடயத்துக்காக கவலை தெரிவித்ததாகவும் கூறினார்.

இந்த ஊடக சந்திப்பின் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளில், 10 கட்சிகளினுடைய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் உதய கம்மன்பி, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோரும் அடங்குவர்.

பசில் மீது கடும் தாக்குதல்

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் விருப்பம் பசில் ராஜபக்ஷவுக்கு இருந்தது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடா விட்டால், கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக்கும் நிலைப்பாடு எமக்கு இருந்தது. எமது முடிவு பசில் ராஜபக்ஷவின் கனவுக்குத் தடையாக இருந்தது.

2015ஆம் ஆண்டு தோல்வியடைந்த போது, மஹிந்த ராஜக்ஷவை சந்தித்த பசில், தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேட்டார். அதற்கு மஹிந்த விரும்பவில்லை. அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கூறாமல் பசில் நாட்டை விட்டுச் சென்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ என்பவர், பசில் ராஜபக்ஷவினால் நிருவகிக்கப்படுபவர்.

பசில் ராஜபக்ஷ ஓய்வு பெற்ற பின்னர் அமெரிக்காவில்தான் வாழ்வார். அவரின் சொத்துக்கள் அங்குதான் உள்ளன. நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ், அமெரிக்காவினால் அவர் எப்போதும் கைது செய்யப்படலாம். அது நடக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்காவுக்கு அவர் பணியாற்றுகின்றார். பொருளாதாளாதார நெருக்கடியின் போதும் அமெரிக்காவுக்காக செயற்படுவதே அவரின் ஒப்பந்தமாகும்.

அமெரிக்கா சென்று நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால், இங்கு அவர் காட்டிக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர் அங்கு வாழ நினைத்தால், நிதித் தூய்தாக்கல் குற்றச்சாட்டுக்குள் அகப்படுவார்.

திருட்டில் மாத்திரமே பசில் ராஜபக்ஷ சூட்சுமமானவர்” என்றும் விமல் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்