அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம்

🕔 February 2, 2022
குப்பைமேட்டை அண்மித்து அகழி வெட்டப்பட்டுள்ள தற்போதைய நிலை

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதே சபைக்குச் சொந்தமான அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டமை காரணமாக கடந்த 08 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 யானைகள் உயிரிழந்துள்ளன என, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் குறித்த குப்பை மேட்டில் யானையொன்று உயியிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டமையினாலேயே அந்த யானை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள குப்பைகள் மேற்படி அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் கொட்டப்படுகின்றன. இதற்காக, இங்கு குப்பைகளைக் கொட்டும் உள்ளுராட்சி சபைகளிடமிருந்து அட்டாளைச்சேனை பிரதேச சபை கட்டணம் அறவிடுகிறது. இதனால் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு வருடாந்தம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கின்றது.

இங்கு கொட்டப்படும் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு, தற்போது அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழிற்சாலையொன்றில் அவை உரமாக மாற்றப்படுகிறது. இந்த உரம் நல்ல விலைக்கு விற்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.

நுழைவாயிலில் கொட்டப்பட்டுள் குப்பை

கழிவுகளைக் கொட்டுவதற்காக இங்கு முன்னர் சில இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது ‘கண்ட நின்ற’ இடங்களிலெல்லாம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசமான முகாமைத்துவம் இதற்குக் காரணமாகும்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் செயலாளர் எனக் கூறிக் கொள்ளும் (இவர் செயலாளர் தரத்தை உடையவர் அல்ல. எழுதுவினைஞர் தரத்தைக் கொண்டவர்) நபர், தனக்கு விருப்பமான பிரதேச சபை ஊழியர்கள் சிலரை, குறித்த குப்பை மேட்டை நிர்வகிப்பதற்காக நியமித்துள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் ஒழுங்காக அங்கு கடமைக்குச் செல்வதில்லை எனவும், கடமைக்கான கையொப்பத்தினை இட்டு விட்டு, தமது தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்காக இவர்கள் வெளியேறி விடுவதாகவும் தெரியவருகிறது.

இதனால், அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் முறையான திட்டமிடலின்றியும், கண்காணிப்பின்றியும் குற்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதுவே அருகிலுள்ள பள்ளக்காட்டுப் பகுதியிலிருந்து யானைகள் இந்தக் குப்பை மேட்டை நோக்கி வருவதற்கான பிரதான காரணமாகும்.

இதேவேளை, இங்கு கொட்டப்படும் குப்பைகளில் கலந்துள்ள பொலித்தீன், பிளாஸ்டிக், கண்ணாடி ஓடுகள் மற்றும் ஆபத்தான பொருட்கள் முறையாகப் பிரிக்கப்படாமையினால், குப்பைகளை உண்ண வருகின்ற யானைகள் – அதனுடன் கலந்துள்ள ஆபத்தான பொருட்களையும் சேர்த்து உண்ணும் நிலை ஏற்படுகிறது. இதனாலேயே யானைகள் மரணிக்கின்றன.

தோற்றுப் போன முயற்சிகள்

மேற்படி குப்பை மேட்டுக்கு யானைகள் வருகின்றமையினைத் தடுப்பதற்காக அங்கு மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றினை யானைகள் சேதப்படுத்தி விட்டு, குப்பை மேட்டுக்கு வந்தன.

தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினால், குப்பை மேட்டைச் சுற்றி அகழிகளைத் தோண்டியுள்ளது. ஆயினும் அதனையும் தாண்டி, குப்பை மேட்டுக்கு வந்த யானைகளில் ஒன்றே, அண்மையில் அங்கு இறந்தது.

குப்பை மேட்டில் சில காலங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம்

பொறுப்பு

அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் யானைகள் ஆபத்தினை எதிர்கொள்கின்றமை மற்றும் பலியாகின்றமைக்கான பெரும் பொறுப்பினை அட்டாளைச்சேனை பிரதேச சபையே ஏற்க வேண்டியுள்ளது.

இலங்கையில் யானைகள் அருகி வரும் உயிரினமாக உள்ளதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

இலங்கையில் யானைகள் அழியும் அபாயத்தில் உள்ளன. நாட்டின் முதல் யானைக் கணக்கெடுப்பின்படி, 19ஆம் நூற்றாண்டில் 14,000 யானைகள் இருந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை 2011இல் 6,000 ஆகக் குறைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்