லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில், இலங்கையின் முதலாவது பெண் குழு இணைகிறது

🕔 January 31, 2022

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் இணைந்து கொள்வதற்காக, இலங்கையின் இரண்டு பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய முதல் பெண் படைக் குழு செல்லவுள்ளது.

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) பனாகொடை இலங்கை இலகு காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு ராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இலங்கை ராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்களும் ராணுவ மரியாதை வழங்கினர்.

லெபனானுக்குச் செல்லும் இலங்கையின் பாதுகாப்புப் படையில் 10 அதிகாரிகள் மற்றும் 115 சிப்பாய்கள் உள்ளனர். இந்தப் படையில் இலங்கை காலாட் படையணி, இலங்கை பொறியியலாளர் படையணி, இலங்கை சமிக்ஞைப் படையணி, இயந்திரவியல் காலாட் படையணி, கமாண்டோ படையணி, விஷேட படையணி, பொறியாளர் சேவை படையணி, இலங்கை ராணுவ சேவை படையணி, இலங்கை ராணுவ மருத்துவப் படையணி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை ராணுவ போர் கருவிகள் படையணி, இலங்கை ராணுவ பொலிஸ் படையணி, இலங்கை ராணுவ மகளிர் படையணி மற்றும் இலங்கை ராணுவ பொது சேவைப் படையணி என்பவற்றின் படையினர் அடங்குவர்.

ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான ராணுவ பணியகத்தினருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் விளைவாக, லெபனானில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய படை அனுப்பப்படவுள்ளது.

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கான இலங்கையின் முதல் பெண் படைக் குழு இதுவாகும்.

இதன்போது லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் இணையவுள்ளவர்களுக்கு ராணுவத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நாட்டுக்குப் பெருமையையும் கௌரவத்தையும் பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்