பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

🕔 January 13, 2022

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால், சதி முயற்சியொன்று உள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதத்தினை கடுமையாக சாடியுள்ள கர்தினால்; “அதிகாரிகள் உண்மையை தெரிவிப்பதற்கு பதில் கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

“கைக்குண்டு மீட்கப்பட்ட தினத்தின் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் முழுமையாக ஆராயவில்லை. பகல் மூன்று மணிமுதல் பதிவாகியுள்ள விடயங்களையே ஆராய்ந்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் அன்று காலை தொடக்கம் பதிவான விடயங்களை ஆராயவில்லை. காலை முதல் சிசிடிவியில் பதிவான விடயங்களில் சந்தேகத்துக்கிடமான விடயங்கள் உள்ளன” எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

காலையில் பதிவான சிசிடிவி காட்சிகளில் சந்தேகத்துக்குரிய விதத்தில் நபர் ஒருவர் செயற்படுவது பதிவாகியுள்ளது என கர்தினால் தெரிவித்துள்ளார்.

“காலை 9.52 மணியளவில் சொப்பிங் பாக்குடன் நொண்டியபடி நபர் ஒருவர் தேவாலயத்திற்குள் நுழைகின்றார். அவர் சுற்றியுள்ள பகுதிகளை ஆராய்கின்றார். பின்னர் காலியாக உள்ள ஆசனத்தில் அமர்கின்றார்” என தெரிவித்துள்ள கர்தினால்; “கத்தோலிக்கர்கள் தேவாயத்துக்குள் நுழையும்போது நடந்துகொள்வது போல (சைன்ஒவ் குரொஸ்) அவர நடந்துகொண்டார். ஆனால் அதனை பிழையாக செய்தார்” என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

“அவர் அதனை செய்த விதத்தினை பார்க்கும்போது, அவர் கத்தோலிக்கர் இல்லை என்பது தெளிவாக புரிகின்றது. அவர் பிரார்த்தனையில் ஈடுபடவில்லை. வாங்கின் நடுப்பகுதிக்கு அவர் செல்கின்றார். அவர் சுரூபத்தை நோக்கி செல்வதை காணமுடிகின்றது. அவர் குனிந்து எதனையோ எடுக்கின்றார். அனேகமாக தனது கால்சட்டை பொக்கட்டிலிருந்து என கருதமுடிகின்றது. அவரை கடந்து இன்னொரு நபர் பார்க்கும்போது இவர் சுற்றிலும் பார்த்துவிட்டு, அங்கிருந்து வெளியேறிச் செல்கின்றார். இந்த சம்பவம் காலை 9.52க்கு இடம்பெற்றுள்ளது” என கர்தினால் தெரிவித்துள்ளார்.

“சிசிடிவியில் காணப்படும் சந்தேகத்திற்குரிய நபர் குறித்து விசாரணை செய்யாமல், தேவாலயத்தினை சுத்திகரிப்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்” என – கர்தினால் சாடியுள்ளார்.

உண்மையை கண்டுபிடிப்பதற்கு பதில், அவர்கள் கதையொன்றை திட்டமிட்டு பரப்புகின்றனர் என கர்தினால் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினக்குரல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்