இ.ஒ.கூட்டுத்தானத்துக்கு அறிவிப்பாளர்களை சேர்த்துக் கொண்டமை தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்கள் கோரி விண்ணப்பம்

🕔 January 12, 2022

– தம்பி –

லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு பகுதி நேர அறிவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பில் விவரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) ஊடாக, அங்கு பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவர், இன்று (12) விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராகக் கடமையாற்றும் எம்.எம்.எம். ஜெஸ்மின் என்பவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிருவாகப் பணிப்பாளருக்கு மேற்படி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

புதிய அறிவிப்பாளர்களாக ஆட்சேர்ப்புச் செய்யும் பொருட்டு 2021 டிசம்பர் 20 அன்று நடத்தப்பட்ட குரல் தேர்வு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் பகுதி நேர அறிப்பாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டதா? என, அந்த விண்ணப்பத்தில் வினவப்பட்டுள்ளது.

அந்தக் குரல் தேர்வின் பொருட்டு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தால், அதற்கான விளம்பரங்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்டதா என்றும், அப்படியானால் எந்த சேவையில் வெளியிடப்பட்டது எனவும் கேட்டுள்ள விண்ணப்பதாரர், அவை பற்றிய ஆவணங்களை வழங்குமாறும் கோரியுள்ளார்.

குறித்த குரல் தேர்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அறிவிப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல்களை வழங்குமாறும் அவர் வேண்டியுள்ளார்.

மேலும், குரல் தேர்வினை நடத்திய நடுவர்களின் பெயர் விவரங்களை வழங்குமாறும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக சம்ப்பிக்கப்பட்ட அந்த விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவைக்கு பகுதிநேர அறிவிப்பாளர்களாக ஆட்சேர்ப்புச் செய்யும் பொருட்டு, கடந்த டிசம்பர் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வுக்காக – பகிரங்க விண்ணப்பம் எவையும் கோரப்பட்டிருக்கவில்லை என்பதையும், அங்கு பணியாற்றும் சிலரின் உறவினர்களை ‘பின்வழியாக’ அறிவிப்பாளர்களாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதையும் ‘புதிது’ செய்தித்தளம் – கடந்த 05ஆம் திகதி வெளியிட்ட செய்தியொன்றின் ஊடாக அம்பலப்படுத்தியிருந்தது. (அந்த செய்தியை இங்கு அழுத்துவதன் மூலம் காணலாம்)

இந்தப் பின்னணியிலேயே, மேற்படி குரல் தேர்வு தொடர்பில் விவரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக இன்று விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; பேசக்கூடாதவற்றைப் பேசிய ‘உளறுவாயர்’: காற்றலையில் மூக்குடைபட்டார்

Comments