இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு

🕔 January 5, 2022

– தம்பி –

லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அறிவிப்பாளர்களாகச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஆட்சேர்ப்புக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக – தனிப்பட்ட ரீதியில் சிலர் அழைக்கப்பட்டு, அண்மையில் நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவிப்பாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதாயின், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான வானொலி அலைவரிசைகளிலும், பத்திரிகைகளிலும் அறிவிப்புச் செய்து, பகிரங்கமாக விண்ணப்பங்களைக் கோருவது விதிமுறையாகும்.

ஆனால், இவ்வாறு பகிரங்கமாக விண்ணப்பம் எதுவும் கோரப்படாமல், அங்கு பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அறிவிப்பாளர்களாக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக, தனிப்பட்ட ரீதியில் ‘பின்வழியாக’ சிலர் அழைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி, அவர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் அறிவிப்பாளர்களாகக் கடமையாற்றும் சீத்தாராமன் மற்றும் நாகபூசணி ஆகியோரின் உறவினர்களை அறிவிப்பாளர்களாகச் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களும் இந்த நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அறிய முடிகிறது.

அந்த வகையில் சீத்தாராமனின் மகன், நாகபூசணியின் சகோதரருடைய மகன் உள்ளிட்டோர், இவ்வாறு பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், ‘பின்வழியாக’ நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விதிமுறைக்கு மாறாக ‘பின்வழியால்’ அழைக்கப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வினை நடத்தும் குழுவில் – அறிவிப்பாளர்களான நாகபூசணி மற்றும் சந்திரமோகன் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.

ஊடகத்துறையில் இணைய வேண்டும் எனும் கனவுகளுடன் பல லட்சம் இளைஞர்கள் வெளியில் காத்துக் கொண்டிருக்கும் போது, தமது உறவினர்களை அரச வானொலியில் அறிவிப்பாளர்களாக நியமிக்கும் பொருட்டு, விதிமுறைகளுக்கு மாறாக ‘பின்கதவு’ வழியால் அழைக்கப்பட்டமை நீதி விரோதமானதாகும். எனவே மேற்படி நேர்முகப் பரீட்சை ரத்துச் செய்யப்படுதல் வேண்டும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவிப்பாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதாயின், அதற்காக கடைப்பிடிக்கப்பட்டு வரும் விதிமுறைகளைப் பின்பற்றி, பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்படுதல் வேண்டும். அப்போதுதான் ஆர்வமுள்ளவர்களும், தகுதியானவர்களும் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

Comments