இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; பேசக்கூடாதவற்றைப் பேசிய ‘உளறுவாயர்’: காற்றலையில் மூக்குடைபட்டார்

🕔 January 11, 2022

– தம்பி –

லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ஒலிபரப்பாகும் ‘விடியும் வேளை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபரொருவர்; அந்த நிகழ்ச்சியில் பேசக் கூடாத விடயங்களைப் பேசி ‘மூக்குடைபட்ட’ சம்பவமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பதிவானது.

குறித்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சந்திரன் இளையதம்பி என்பவரே இவ்வாறு ‘மூக்கு உடைபட்டார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், சொந்தங்களையும் அறிவிப்பாளர்களாக சேர்த்துக் கொள்வதற்காக, பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளமை குறித்து கடந்த 05ஆம் திகதி ‘புதிது’ செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தச் செய்தியானது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ஒலிபரப்பரப்பாகும் ‘விடியும் வேளை’ நிகழ்ச்சியை கடந்த 09ஆம் திகதி தொகுத்து வழங்கிய சந்திரன் இளையதம்பி என்பவர், ‘புதிது’ வெளியிட்ட செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் பேசினார்.

இதன்போது சந்திரன் என்பவருடன் இணைந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் ராஜபுத்திரன் யோகராஜா; மேற்படி சந்திரன் என்பவரின் பேச்சை இடைமறித்து; “இந்த விடயம் தொடர்பில் நிர்வாகத்தினர்தான் பேச வேண்டும், இதைப் பேசுவதற்கு நமக்கு அதிகாரமில்லை. இந்த விடயத்தை நாம் தொடுவது தவறானது” எனக்கூறி, சந்திரன் என்பவரின் மூக்கை உடைக்கும்படி நேரடி நிகழ்ச்சியிலேயே அறிவுரை வழங்கினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளர்களை சேர்ப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுக்கு, அங்கு பணியாற்றும் சிலரின் உறவினர்கள் ‘பின்வழியால்’ அழைக்கப்பட்டமை குறித்தும், குறித்த ஆட்சேர்ப்புக்கு பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமை பற்றியும் ‘புதிது’ செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சந்திரன்?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் தமிழ் சேவையில் கடந்த 06 மாதங்களாக நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் மேற்படி சந்திரன் இளையதம்பி என்பவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் முறையாகத் தெரிவு செய்யப்பட்ட ஓர் அறிவிப்பாளர் கிடையாது. இவரின் பெயர் அங்குள்ள அறிவிப்பாளர்கள் பெயர்ப் பட்டியலிலும் இல்லை.

அறிவிப்பாளர்களாக ஆட்சேர்ப்புச் செய்யும் பொருட்டு நடத்தப்படும் எந்தவித குரல் பரீட்சைகளுக்கும் தோற்றாமல், அறிவிப்பாளர்களாக தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் நேர்முகத் தேர்வு எதிலும் பங்குபற்றாமல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் தற்போதைய தலைவரின் ‘எடுபிடி’யாக வந்து, தமிழ் சேவையில் மேற்படி சந்திரன் என்பவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

அறிவிப்பாளர்களுக்குரிய குரல் வளமோ, உச்சரிப்புத் திறனோ, தெளிந்த மொழிநடையோ இல்லாத சந்திரன் இளையதம்பி எனும் இந்த நபருக்கு, நாட்டின் தேசிய வானொலியில் காலைநேர நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை, மிக மோசமான அதிகாரத் துஷ்பிரயோகமாகும்.

ஒலிபரப்புத் துறையின் ஜாம்பவான்கள் இருந்து பணியாற்றிய இடமொன்றில், சந்திரன் இளையதம்பி போன்ற ‘உளறுவாயர்கள்’ பணிக்கு அமர்த்தப்பட்டமை தொடர்பில், உரிய ‘இடங்களுக்கு’ விரைவில் தெரியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியமாகும்.

அறிவிப்பாளர் எனும் பெயரில் வானொலியில் ‘உளறும்’ மேற்படி சந்திரன் இளையதம்பி என்பவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் ‘விசேட’ கொடுப்பனவுகளை பெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது.

தொடர்பான செய்தி: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்