பிரியந்த குமார படுகொலையில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பில்லி’ கைது

🕔 December 7, 2021

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பாகிஸ்தான் பஞ்சாப் பொலிஸார் நேற்று (06) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

“இலங்கைப் பிரஜை ஒருவரை கொடூரமாகக் கொன்று, அவரின் உடலை இழிவுபடுத்திய விவாகரத்தில் தொடர்புடைய மிகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான பில்லி (Billi) என்கிற இம்தியாஸ் என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்” என்று பஞ்சாப் பொலிஸார் தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

பொலிஸாரிடமிருந்து தொடர்ந்து தப்பி வந்த இவர், இறுதியாக ராவல்பிண்டி செல்லும் பஸ்ஸில் கைது செய்யப்பட்டார்.

இவர் கைது செய்யப்பட்டமையை அடுத்து, பிரிந்த குமாரவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர் உட்பட, அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தப் படுகொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 132 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர்.

‘பஞ்சாப் முதல்வர் உஸ்மான் பஸ்தார் மற்றும் பஞ்சாப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் வழக்கு விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை, அரசுத் தரப்பு செயலாளரிடம் முதல்வர் ஒப்படைத்துள்ளார்’ என பொலிஸாரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியந்தவுக்கு எதிரான தாக்குதலைத் தூண்டியவர்களில் ஒருவரான அத்னான் இப்திகார் என்பவரையும் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 900 பேர் மீது பொலிஸார் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தான் – சியல்கோட் சம்பவத்தில் பலியான பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள் நேற்று இலங்கைக்கு அனுப்பப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்