ஒழுக்கங் கெட்ட உறுப்பினர்கள்; கண்டும் காணாத தவிசாளர்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அவலம்

🕔 December 7, 2021

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் சிலர், ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் – எவ்வகையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டுமென ஒழுக்கக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதற்கு மாறாக சில உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்ட அமர்வு, நேற்று திங்கட்கிழமை (06) நடைபெற்ற போது, அங்கு சமூகமளித்திருந்த சில உறுப்பினர்கள், ஒழுக்க நெறிக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு முரணான வகையில் ஆடைகளை அணிந்திருந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ரி. ஆப்தீன், றியா மசூர் மற்றும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் கீர்த்தி ரணசிங்க ஆகியோர் இவ்வாறு ஒழுக்கமற்ற ரீதியில் ஆடைகளை அணிந்திருந்தனர்.

ஒழுக்கக் கோவை சொல்லும் ஆடை வகை என்ன?

உள்ளுராட்சி மறுசீரமைப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைவாக, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்டு, கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் வெளியிட்ட, ‘உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறிக்கோவை’யில், சபை அமர்வுகளின் போது எவ்வகையான ஆடைகளை அணிய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் ‘உள்ளுராட்சி மன்ற மக்கள் பிரதிநிதி ஒருவரின் உத்தியோகபூர்வ சீருடையானது, ஆண்களுக்கு தமது தேசிய ஆடை அல்லது பூரண ஐரோப்பிய ஆடையும், பெண்களுக்கு தமது தேசிய ஆடையுமாகும்’ என, ஒழுக்கக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டு கொள்ளாத தவிசாளர்

சபை அமர்வின் போது உள்ளுராட்சி உறுப்பினர் ஒருவர் எவ்வகையான ஆடையை அணிந்திருக்க வேண்டும் என்று, இவ்வாறு ஒழுக்கக் கோவையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதற்கு முரணமாகவும், சபையை அவமதிக்கும் வகையிலும் ஆடை அணிந்து வந்த, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மேற்படி உறுப்பினர்களை, தவிசாளர் ஏ.எல். அமானுல்லா கண்டுகொள்ளவுமில்லை, அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவுமில்லை.

ஒழுக்கக் கோவையில் – குறித்துச் சொல்லப்பட்டுள்ளமைக்கு முரணாக ஆடை அணிந்து வருவோரை சபை அமர்வுகளுக்கு அனுமதிக்கக் கூடாது அல்லது சபை அமர்வுகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என, இது குறித்து துறைசார்ந்தவர்களிடம் ‘புதிது’ வினவியபோது தெரிவித்தனர்.

எனவே, ஒழுக்கங்கெட்ட உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்காலத்திலாவது தவிசாளர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என விடயமறிந்தோர் வினவுகின்றனர்.

ரி. ஆப்தீன்
றியா மசூர்
கீர்த்தி ரணசிங்க

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்