மாகாண சபைத் தேர்தலை முன்னைய அரசாங்கம் தந்திரமாக ஒத்தி வைத்தது: அமைச்சர் பீரிஸ் குற்றச்சாட்டு

🕔 November 19, 2021

முன்னைய அரசாங்கம் வேண்டுமென்றே தந்திரமாக மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்ததாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (19) நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு இயன்றவரை முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய சட்டமொன்றை நிறைவேற்றாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர்; புதிய சட்டத்தை கொண்டு வராமல் மாகாண சபைகள் சட்டத்தை கடந்த அரசாங்கம் நீக்கியதாகவும் கூறினார்.

“தேர்தல் முறை தொடர்பான உடன்பாடு இல்லாமல், தேர்தலை நடத்த முடியாது என்று அவர்கள் பின்னர் வாதிட்டனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை முன்வைப்பதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு அயராது உழைத்து வருவதாக கூறிய அவர்; “குழு வாரம் இருமுறை கூடுகிறது. அயராது உழைக்கிறார்கள். புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவும், மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்” எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்