பாலியல் நடத்தையை தடுப்பூசி பாதிக்காது: சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு

🕔 September 27, 2021

பாலியல் செயற்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதினால் கருத்தரிக்காமை, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று சமூகத்தில் சில கருத்துக்கள் பரவி வருகின்றன என்றும், இதுதொடர்பில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) ‘தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களை தோற்கடிப்போம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதனால் பாலியல் ஆரோக்கியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை”.

“கருவுறுதலை தடுப்பூசி பாதிக்கும் அல்லது மலட்டுத்தன்மையை தடுப்பூசி ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. எனவே, இளம் தலைமுறையினர் எந்தவித அச்சமும் சந்தேகமும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments