தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமனம்

🕔 June 22, 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசியர் றமீஸ் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையின் வயது குறைந்த (43 வயது) உப வேந்தர் எனும் அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகப் பதவி வகித்து வந்த நிலையில் அவருக்கு இந்த நியமனம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி இந்த நியமனம் அமுலுக்கு வருகின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களாகும் நிலையில், அந்தப் பல்லைக்கழகத்தின் மாணவர் ஒருவரே உப வேந்தராக நியமிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும்.

றமீஸ் அபூபக்கர்: பின்னணியும், தகுதிகளும்

சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாதாரண குடும்பப் பின்னணியினைக் கொண்டவர். இவர் மிஸ்கீன் பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாவார். மூன்று சகோதரிகளையும் ஒரு சகோதரரையும் உடன் பிறப்புக்களாகக் கொண்ட பேராசிரியர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆசிரியை சில்மியத்துல் சிபானாவினை மணமுடித்துள்ளார். இவர்களுக்கு இரு ஆண் , ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் தனது ஆரம்பக் கல்வியினை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியினை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்றுக்கொண்டார்.

பல்கலைக்கழக கல்வியினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இப்பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையினைக் கற்ற ஆரம்ப மாணவர் தொகுதியினைச் சேர்ந்த இவர், சமூகவியல் துறையில் முதல் வகுப்புச் சித்தியினையும் பெற்றுக்கொண்டார். 2005இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைத்துக் கொள்ளப்பட்ட றமீஸ் அபூபக்கர், 2006ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் சமூகவியல் முது தத்துவமாணிப் பட்டத்தினை (2010) பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் முரண்பாடு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்பின் படிப்பினை (2010) இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிரட்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

தனது கலாநிதி பட்டப்படிப்பினை உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இக்கற்கையினைத் தொடர்வதற்கான ஆய்வுப் புலமைப்பரிசிலினை பெற்றுக்கொண்ட றமீஸ் அபூபக்கர், புகழ்பெற்ற கல்விமான் பேராசிரியர் செய்ட் பரீட் அலடாஸின் வழிகாட்டலின் கீழ் தனது ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூகப் பிரச்சினைகள், தொடர்பாடல், இனத்துவம், அரசியல் சமூகவியல், சிறுபான்மைக் கற்கைகள் முதலிய ஆய்வுப் பரப்புக்களில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர், 2011இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் இரண்டிற்கும், 2017இல் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றுக்கும் பதவியுயர்த்தப்பட்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவினை தனியான ஒரு துறையாக நிறுவுவதில் பெரும் பங்காற்றிய றமீஸ் அபூபக்கர், 2017ஆம் ஆண்டு அத்துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரி சேவைகள், சர்வதேச தொடர்புகள், பல்கலைக்கழக ஆசிரியர் விருத்தி நிலையங்களின் பணிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவி நிலைகளை வகித்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2019ஆம் ஆண்டு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு தற்போது வரை அந்தப் பதவியினை வகிக்து வருகின்றார்.

பீடாதிபதி என்றவகையில் தனது பீடத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இவரது அயராத முயற்சியின் பயனாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஐந்து துறைகளினால் (அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், மெய்யியல், புவியியல், தமிழ்) பட்டப்பின் படிப்புக் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எமது பிரதேசத்தினை சேர்ந்த மாணவர்கள் முது தத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு உருவாகியள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரை ஆற்றியுள்ள இவர், உலகத் தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகள் பலவற்றில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தனது ஆய்வு வெளியீடுகளுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உலகத் தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டமைக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் வழங்கப்படும் கௌரவப் பட்டத்தினை பல முறை பெற்ற பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2019இல் ‘கெய்சிட்’ என அழைக்கப்படும் வியன்னாவில் உள்ள சர்வதேச சம்பாஷனை நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்