‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை’: டொக்டர் சுகுணனின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்

🕔 June 22, 2021

– அஹமட் –

ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன், முகக் கவசம் அணியாமல் பலர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட படங்கள் – சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அவரின் அந்த செயற்பாடு குறித்து கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

டொக்டர் சுகுணன் முகக் கவசம் அணியாமல், நிகழ்வுகளில் கலந்து கொண்ட சில படங்களை – அவரே தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுகுணன் முகக் கவசம் இன்றிக் காணப்படும் அந்த படங்களில் உள்ள ஏனையோர் – முகக் கவசம் அணிந்துள்ளனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை ‘ஐந்தறிவுள்ளவை’ எனக் குறிப்பிட்டு, அண்மையில் டொக்டர் சுகுணன் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதியிருந்த நிலையிலேயே, முகக் கவசமின்றி நிகழ்வுகளில் தான் கலந்து கொண்ட படங்களை சுகுணன் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று முன்தினம் (20ஆம் திகதி) பதிவொன்றை இட்டுள்ள டொக்டர் சுகுணன்; ‘கல்முனை பிராந்தியத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் யாருக்காவது மண்டைக்குள் சுகாதார அறிவு இல்லையாயின், கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சிலருக்கு பாடம் சொல்லிக் கொடுக்க எமது கடைநிலை உத்தியோகத்தர்களுக்கே முடியும்’ என எழுதியுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ள சமூக வலைப்பதிவர்கள்; ‘தற்போது அவரே சுகாதார அறிவற்ற வகையில் முகக் கவசம் இன்றி – பலருக்கு மத்தியில் சமூகமளித்துள்ளதோடு, அவ்வாறான படங்களை வெளியிட்டும் உள்ளார்’ எனக் கிண்டலடித்துள்ளனர்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் – முகக் கவசம் இன்றி, பலருக்கு மத்தியில் இருக்கும் படங்களை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒருவர்; ‘இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளனவா? சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு விசேட சட்டமா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளதோடு; ‘வெட்கம்’ (Shame) என்று, சுகுணனின் நடத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.

‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லையடி’ என்பதுபோல், சுகுணனின் இந்த செயற்பாடு உள்ளதாகவும் சிலர் எழுதியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்