மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து

🕔 April 29, 2021
ஆவணப்படம்: சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையில் பிடிக்கப்பட்டது

– அஹமட் –

ட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவுக்கு அருகில் நேற்று புதன்கிழமை வாகன விபத்தொன்றில் சிக்கி நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சகோதரரர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தார்.

நீண்டகாலம் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு அண்மையில் இவர் நாடு திரும்பியிருந்ததாக தெரியவருகிறது.

சம்பந்தப்பட்டவர் மோட்டார் பைக்கில் பயணித்தபோது, வீதியில் மாடு குறுக்கிட்டதால் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாகவே, அந்த இடத்தில் பயணித்த டிப்பர் வாகனத்தில் மோதி இறந்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மாடுகளின் தொல்லை காரணமாக அடிக்கடி இவ்வாறு விபத்துகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்பாக, பிரதான வீதியோரத்தில் தினமும் மாடுகள் உலவுவதையும், இரவில் அந்த இடத்திலேயே மாடுகள் படுத்துறங்கவதையும் காண முடிகிறது.

இந்த விடயத்தில் அவ்வப்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் தலையிட்டு – மாடுகளைக் கைப்பற்றி, அவற்றின் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் விதித்துள்ள போதிலும், பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

விலங்குகளை ஒருவர் வளர்க்க ஆரம்பித்தால் அவற்றுக்கானன உணவு மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியமை உரிமையாளரின் தார்மீகப் பொறுப்பாகும். மட்டுமன்றி தமது பொறுப்பிலுள்ள விலங்குகளை இவ்வாறு கட்டாக்காலிகளாக வீதிகளில் உரிமையாளர்கள் அலைய விடுகின்றமை சட்டவிரோதமான செயற்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் குறித்து சமூக அக்கறையுடையோரும், ஊடகங்களும் அடிக்கடி எழுதி வருகின்ற போதும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு இதுவரை உறைத்ததாகத் தெரியவில்லை.

எனவே, வீதிகளில் கட்டாக்காலிகளாக அலையும் மாடுகள் கைப்பற்றப்பட்டு, அவை அரசுடமையாக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவற்றின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தின் ஊடாக கடுமையாகத் தண்டிக்கப்படும் வகையில், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.

மனித உயிர்களின் பெறுமதியை இவ்வாறான கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களான ‘மனித மாடுகள்’ அறியாதபோது, அவர்களுக்கு சட்ட ரீதியாக ‘சூடு’ வைக்க வேண்டியமை, பொறுப்பு வாய்ந்தோரின் கடமையாகும்.

இதேவேளை, இந்த விடயத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் மாடுகளைப் பிடிப்பதற்காக சபையின் ஊழியர்கள் சிலரை நிரந்தரமாக முழு நாட்களும் பணியில் அமர்த்த வேண்டும். அத்தோடு, கட்டாக்காலிகளாகத் திரியும் மாடுகள் தொடர்பில் – பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்றினையும் பிரதேச சபை வழங்க வேண்டும்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச சபையும் பொறுப்புக் கூற வேண்டும்.

இது தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு எதிராக, பொதுநல வழக்கு ஒன்றினையும் சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்யலாம்.

கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் ஏற்படும் நிலைவரம், அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆவணப்படம்: சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையில் பிடிக்கப்பட்டது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்