பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல்

🕔 February 23, 2021

லங்கையின் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையில் உருவான ஒரு பல்கலைக்கழகமே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். அக்கால கட்டத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் மாணவர்களுக்குரிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் அது இன்று ஒரு தேசிய பல்கலைக்கழகத்திற்குரிய எல்லா குணாம்சங்களையும் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது.

இப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு பெரும்பங்குண்டு.

முஸ்லிம் சமூகத்தின் ஒப்பற்ற தலைவனாக அப்போதிருந்த அவர், அச்சமூகத்தின் அரசியல், சமூக, கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டிருந்தார். அதுவே அவரது உயிர்மூச்சாகவும் இருந்தது. அவரது அயராத உழைப்பினால்தான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவானது.

அதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு விடிவினை அவர் தேடி வைத்திருந்தார்.

இரு தசாப்தங்களைக் கடந்த இந்த சூழ்நிலையில் அஷ்ரஃபின் அந்தக் கனவு நனவாகிவருகிறது. முஸ்லிம் சமூகத்திலிருந்து சிந்திக்கின்ற ஒரு சமூகம் உருவாகியுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பல கலாநிதிகளை உருவாக்குகின்ற நிலைக்கு மாறியிருக்கின்றது. இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர்களாக பலர் பதவியுயர்வு பெற்று வருகின்றார்கள்.

அவ்வகையிலேதான் இப்பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் ஒரு பேராசிரியராக கலாநிதி றமீஸ்அபூபக்கர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

இளமைக் காலம்

சாய்ந்தமருதினைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாதாரண குடும்பப் பின்னணியினைக் கொண்டவர். இவர் மிஸ்கீன்பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாவார்.

மூன்று சகோதரிகளையும் ஒரு சகோதரரையும் உடன்பிறப்புக்களாகக் கொண்ட பேராசிரியர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆசிரியை சில்மியத்துல் சிபானாவினை மணமுடித்துள்ளார்.

இவர்களுக்கு இரு ஆண்குழந்தைகள் உள்ளனர். இவர் தனது ஆரம்பக் கல்வியினை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியினை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்றுக்கொண்டார்.

க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சிறந்தபெறுபேற்றினைப் பெற்று பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார்.

உயர்கல்வி

பல்கலைக்கழக கல்வியினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

இப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையினைக் கற்ற ஆரம்ப மாணவர் தொகுதியினைச் சேர்ந்த இவர், சமூகவியல் துறையில் முதல் வகுப்புச் சித்தியினையும் பெற்றுக்கொண்டார்.

2005இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைத்துக் கொள்ளப்பட்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2006ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் 2010ஆம் ஆண்டு சமூகவியல் முதுதத்துவமாணிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் அதே ஆண்டு முரண்பாடு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்பின் படிப்பினை இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிரட்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

தனது கலாநிதி பட்டப்படிப்பினை உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.

இக் கற்கையினைத் தொடர்வதற்கான ஆய்வுப் புலமைப் பரிசிலினை பெற்றுக்கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், புகழ்பெற்ற கல்விமான் பேராசிரியர் செய்ட் பரீட்அல் அடாஸின் வழிகாட்டலின் கீழ், தனது ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவி உயர்வு

சமூகப் பிரச்சினைகள், தொடர்பாடல், இனத்துவம், அரசியல் சமூகவியல், சிறுபான்மைக் கற்கைகள் முதலிய ஆய்வுப் பரப்புக்களில் நிபுணத்துவம் பெற்றுள்ள பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2011இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் இரண்டிற்கும், 2017இல் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றுக்கும் பதவியுயர்த்தப்பட்டார்.

இவர் 05.09.2019 ஆம் திகதி முதல் இப் பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசிரியராகப தவிஉயர்வு பெற்றுள்ளார்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் பீடாதிபதி ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவது இதுவே முதற் தடவையாகும்.

அதிலும் குறிப்பாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலேயே கல்வி கற்று, அப்பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இளம் விரிவுரையாளரான கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவினை தனியான ஒரு துறையாக நிறுவுவதில் பெரும்பங்காற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2017ஆம் ஆண்டு அத்துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரி சேவைகள், சர்வதேச தொடர்புகள், பல்கலைக்கழக ஆசிரியர் விருத்தி நிலையங்களின் பணிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவி நிலைகளை வகித்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2019ஆம் ஆண்டு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு தற்போதுவரை அதன்பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.

பீடாதிபதி என்ற வகையில் தனது பீடத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவரது அயராத முயற்சியின் பயனாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஐந்து துறைகளினால் (அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், மெய்யியல், புவியியல், தமிழ்) பட்டப் பின் படிப்புக் கற்கைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் எமது பிரதேசத்தினை சேர்ந்த மாணவர்கள் முது தத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

ஆய்வுப் பணி

பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரை ஆற்றியுள்ள இவர், உலகத் தரம்வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகள் பலவற்றில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தனது ஆய்வு வெளியீடுகளுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உலகத் தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டமைக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் வழங்கப்படும் கௌரவப்பட்டத்தினை பலமுறை பெற்ற பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2019இல் கெய்சிட் என அழைக்கப்படும் வியன்னாவில் உள்ள சர்வதேச சம்பாஷனை நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தினையும் பெற்றுள்ளார்.

முடிவுரை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவனாகவும் சமூகத்தில் ஒரு இளம் ஆய்வாளராகவும் பிராந்தியத்தின் சிறந்த கல்விமானாகவும் இந்நாட்டின் சிறந்த குடிமகனாகவும் செயற்படும் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சிதரும் செய்தியாகும்.

பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களின் இத்தகைய பங்கும் பணியும் வளர்ச்சியும் தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் மெச்சத்தக்கதாகும்.

அவ்வகையிலேயே இந்த வகிபாகத்தினைஅவர் அதிபதியாக பதவி வகிக்கின்ற கலை கலாசார பீடம் பேருவகையுடன் கொண்டாடுகின்றது.

அதற்கென நாளை புதன்கிழமை தென்கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீடத்தில் பாராட்டு வைபவமொன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இவ்வைபவத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம்
ஏற்பாட்டுக்குழு
கலைகலாசாரபீடம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

தொடர்பான கட்டுரை: சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா?

Comments