சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா?

🕔 November 26, 2019

கலாநிதி றமீஸ் அபூபக்கர் உடன் ஒரு கலந்துரையாடல்

– மப்றூக் –

டைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் சாதிப் பாகுபாடு முக்கியமானதொரு காரணமாக  அமைந்து விட்டது என்கிற பேச்சு பரவலாக உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸவை, அந்தக் கட்சிக்குள் முக்கியஸ்தர்களாக இருக்கும் உயர்சாதி மேட்டுக் குடியினர் திட்டமிட்டுத் தோற்கடித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், தன்னுடைய கட்சித் தலைமை, தனக்கு துரோகமிழைத்து விட்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, “ஐக்கிய தேசியக் கட்சியில் பதவியிலிருக்கும் வரலாற்றுத் துரோகிகளின் ஒரு குழுவினரால், சஜித் பிரேமதாஸ தோல்வியடையச் செய்யப்பட்டார்” என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சாட்டியிருக்கின்றார்.

சாதி படிமுறையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனும் அடையாளத்தைக் கொண்ட சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையுடன் மிகவும் போராட்டம் நடத்தியே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உயர் பதவிகளில் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தினர் சிலரின் – சாதிப் பாகுபாடு கொண்ட செயற்பாட்டினாலேயே, சஜித் பிரேமதாஸ தோற்கடிக்கப்பட்டார் எனும் குற்றச்சாட்டுகள் குறித்தும், சிங்கள மக்களிடையே உள்ள சாதிக் கட்டமைப்பு பற்றியும், அரசியலில் சாதியின் வகிபாகம் என்ன என்பது தொடர்பாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சமூகவியல் துறைத் தலைவரும், தற்போதைய கலைப்பீட பீடாதிபதியுமான கலாநிதி றமீஸ் அபூபக்கர் உடன் பேசினோம்.  

கலாநிதி றமீஸ் அபூபக்கர்

அதன்போது அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதனை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

“சாதி என்பது சமூகவியலில் மிக முக்கியமான ஆய்வு விடயமாகக் கருதப்படுகிறது. சமூக தரப்படுத்தலில் சாதி என்பது மிக முக்கியமான விடயமாகும். சாதி என்பது பிறப்பில் தீர்மானிக்கப்படுகிறது. இது மூடிய சமூகப் பிரிவாகக் கருதப்படுகிறது. சாதி முறைமையில் சமூக அசைவு சாத்தியமில்லை. அதாவது குறித்த ஒரு சாதியில் ஒருவர் பிறந்தால், இறக்கும் வரை அந்தச் சாதியாகவே அவர் இருப்பார்.

இலங்கையினுடைய வரலாறு இந்தியாவுடன் தொடர்புபடுகிறது. இந்தியாவில் சாதிக் கட்டமைப்பு பலமாக வேறூன்றி உள்ளமையினால், இலங்கையிலும் சாதி முக்கியத்துவப்படுகிறது. ஆனாலும், இந்தியாவைப் போன்று சாதிக் கட்டமைப்பு இலங்கையில் ஆழமாக வேறூன்றிக் காணப்படவில்லை. இருந்தபோதும் அரசியல் மற்றும் சமயம் போன்றவற்றில் சாதி என்பது, ஒரு குறியீட்டுப் பங்கினை (symbolic role) வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிங்கள சமூகத்தில் சாதி

இலங்கையில் சிங்கள மக்களுடைய பரம்பரை ஆய்வின்படி, சிங்கள மக்களில் அதிகமானோர் கிழக்கிந்திய மேல்சாதி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் எனக் குறிப்பிடப்படுகிறது. அதனால்தான் சிங்கள மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் ‘கொவிகம’ சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

18ஆம் நூற்றாண்டில் கண்டி ராஜியத்திலும் கூட ராஜா, பமுனு, வேலந்த, கொவி போன்ற சாதிகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. காலணித்துவ காலத்திலும் சாதிப் பிரிவுகள் தொடர்ந்திருந்தன. குறிப்பாக தொழில்களிலும் சாதிப் பிரிவு செல்வாக்குச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலணித்துவவாதிகள் சாதிப் பிரிவை தொடர்ந்து தக்க வைத்ததோடு, அவர்களுக்கு மத்தியில் தொழில் பிரிப்பை மேற்கொண்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கையிலுள்ள சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சாதிப் பிரிவை எடுத்து நோக்குகின்ற போது, இரண்டு வகையான சாதிப் பிரிவுகள், அவர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒன்று – மேல் சாதி. இதனை கண்டியன் சாதி என்றும் சொல்வார்கள். மற்றையது தெற்கு சாதி. இதனை தாழ்ந்த அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி என்றும் குறிப்பிடுகின்றனர்.

சாதிக் கட்டமைப்பு

கண்டியன் சாதியில் மிகப் பிரதானமானது கொவிகம பிரிவாகும். இவர்கள் பரம்பரை பரம்பரையாக நிலச் சுவாந்தர்களாக இருந்தனர். இருந்த போதும் பிற்பட்ட காலத்தில் இவர்கள் விவசாயிகளாகவும், காணிகளில் பயிர் செய்கின்றவர்களாகவும் இருந்துள்ளனர். இந்த சாதியினர் ‘அக மணம்’ புரிகின்வர்களாக, அதாவது அந்த சாதிக்குள்ளேயே திருமணம் புரிகின்றவர்களாக இருந்துள்ளனர்.

கண்டியன் சாதியினருக்கு மத்தியிலும் பல பிரிவுகள் இருந்துள்ளன. உதாரணமாக, கண்டியன் அரச பரம்பரையினர், கோயில்களில் பணியாற்றுவோர், நாடோடிகள், மரம் வெட்டுவோர் (Wood cutters) போன்றோரை கண்டியன் சாதியின் உட் பிரிவினர்களாகக்  குறிப்பிடலாம்.

கொவிகம

கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் அரசியலில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் பௌத்த மதத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றவர்களாகவும், ‘சியாம் நிகாய’ பிரிவில் முக்கியத்துவமுடையவர்களாகவும் இவர்கள் இருந்துள்ளனர். கொவிகம சாதியினர் கண்டி மற்றும் கொழும்பு பகுதியில்தான் அதிகம் வாழ்ந்து வந்துள்ளனர்.

கொவிகம சாதியினருக்கு பிரதானமான பெயர்கள் இருக்கின்றன; அவை நீண்டவை. முதியன்சே, அப்புஹாமி, நவரட்ண, ஜயதிலக, ஜயவர்த்தன, ராஜபக்ஷ, கிரியெல்ல, விஜேவர்த்தன, ஆராச்சி, விதான, பண்டார நஸ்கம, திஸாநாயக்க என்று அவர்களின் பெயர்கள் ஆரம்பிக்கும்.

கொவிகம சாதியைச் சேர்ந்த பிரதான அரசியல்வாதிகளாக ஜோன்கொத்தலாவல (இலங்கையின் மூன்றாவது பிரதம மந்திரி), எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க (நாலாவது பிரதம மந்திரி), தஹநாயக்க (ஐந்தாவது பிரதமர்), காமினி திஸாநாயக்க (முன்னாள் அமைச்சர்), ரணில் விக்ரமசிங்க (ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், ராஜிநாமா செய்த பிரதமர்) போன்றோரைக் கூற முடியும்.

கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள்தான் நாட்டை ஆளவேண்டும் என்கிற எழுதப்படாத விதி, காலகாலமாக இருந்து வந்தது, அந்த விதியை உடைத்தவராக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவைக் குறிப்பிடலாம். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவின் தந்தை – இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு சாதி

அடுத்ததாக சிங்கள சமூகத்திலுள்ள தெற்கு சாதி அல்லது தாழ்ந்த அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி என்று கூறப்படுவோரை நோக்கும் போது, இவர்களில் மூன்று வகையான பிரிவினர் பிரதானமானவர்களாக உள்ளனர்.

சலகம என்பது அவற்றில் ஒன்றாகும். இந்தச் சாதியில் உள்ளோர் ராணுவ வீரர்களாகவும், கறுவா வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களாகவும் உள்ளனர். மற்றைய சாதிப் பிரிவு துறாவ என்பதாகும். இவர்களில் அதிகனோர் ராணுவ வீரர்களாகவும், கள்ளு இறக்குகின்றவர்களாகவும் இருந்துள்ளார்கள். அடுத்தது கரவா எனும் சாதிப் பிரிவு. இந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்பவர்களாக இருந்துள்ளனர்.

இன்னும் பல தாழ்ந்த சாதிகளும் உள்ளன. குறிப்பாக ரொடிய எனும் சாதியினர் தீண்டத்தகாவர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

தாழ்ந்த அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்போர், சமூகத்தில் கீழ் நிலையில் இருந்தாலும், காலணித்துவ காலத்தில் இவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து, பொருளாதார நிலையில் முன்னேறி சமூகத்தில் முன்னுக்கும் வந்துள்ளனர். 20ஆம் நூற்றாண்டில் சலகம சாதியினர் பெரும் வியாபாரிகளாகவும், பெரிய பதவிகளை வகித்தும்  இருந்துள்ளனர்.

இவ்வாறான பிற்படுத்தப்பட்ட சாதி வழியில் வந்தவர்தான் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ.

அரசியலிலும், மதத்தினுள்ளும் கொவிகம சாதியினரின் ஆதிக்கத்தினை உடைக்க வேண்டும் என்பதற்காக, தாழ்ந்த சாதியினருக்கு காலணித்துவ வாதிகள், அரச தொழில்களை வழங்கியதோடு, அவ்வாறான சாதியினர் கல்வி கற்பதைத் தூண்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். ஆனாலும், கொவிகம சாதியினரின் மேலாதிக்கம் பரம்பரை பரம்பரையாக இருந்துதான் வந்துள்ளது.

ரணசிங்க பிரேமதாஸ

இவ்வாறு கொவிகம சாதியினரின் ஆதிக்கம் இருந்து வந்த நிலையில்தான், பிற்படுத்தப்பட்ட சாதியாகக் கருதப்படும் உடுப்புத் துவைப்போர் (டோபி) பிரிவிலிருந்து 1980களில் ரணசிங்க பிரேமதாஸ நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றார்.

ரணசிங்க பிரேமதாஸ: குழந்தையாக, சிறுவனாக, இளைஞராக

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ரணசிங்க பிரேமதாஸவுக்கு நியமனம் வழங்க வேண்டியிருந்தபோது, அதற்கு பாரியளவில் எதிர்ப்புக் கிளம்பியது. சாதியை அடிப்படையாகக் கொண்ட எதிர்ப்பும் அதில் உள்ளடங்கும். அவர் அங்கத்துவம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே, அவருக்கு எதிர்ப்புக் கிளம்பியமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அவ்வாறான எதிர்ப்புகளையெல்லாம் மீறி, அவர் தேர்தலில் களமிறங்கி, ஜனாதிபதியாக வெற்றி பெற்ற வரலாறை நாம் அறிவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியும் கொவிகம சாதியும்

ஐக்கிய தேசியக் கட்சியினுள் உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த கொவிகம எனும் – மேல் சாதியின் ஆதிக்கம் இருந்து வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொவிகம சாதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில்தான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்னிலைப்படுத்துவதற்கும், அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் அந்தக் கட்சிக்குள் இருக்கும் கொவிகம சாதியைச் சேர்ந்த உயர் குழாம் வர்க்கத்தினர் விரும்பவில்லை. ஆனாலும் சில நிர்ப்பந்தங்கள் காரணமாக, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கொவிகம சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியில், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ களமிறக்கப்பட்ட போதிலும், கட்சியிலுள்ள உயர் சாதியினர் – அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று விரும்பி, முழு மூச்சாகச் செயற்படவில்லை என்கிற விமர்சனம் உள்ளது. அதை சஜித் பிரேமதாஸவும் தேர்தலுக்குப் பிறகு வெளிப்படையாகக் கூறி வருகின்றார்.

சஜித் பிரேமதாஸவின் சாதி அடையாளம்

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சஜித் பிரேமதாஸவின் சாதி அடையாளமும் குறித்துச் சொல்லத்தக்க காரணியாக அமைந்திருந்தது. பிற்படுத்தப்பட்ட  சாதியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள கொவிகம சாதியைச் சேர்ந்த முக்கியமானவர்களின் விரும்பமின்மை, சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

ஆனாலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைவதற்கு மேற்சொன்ன சாதி அடையாளம் என்பது மட்டும் காரணமாக இருக்கவில்லை என்பதையும் விளங்கிக் கொள்தல் வேண்டும்.

ஐக்கிய தேசிக் கட்சி அரசாங்கம் மீதுள்ள விரக்தி, பிரதமர் ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும் ஜனாதிபதி இன்னொரு கட்சியை சார்ந்தவராகவும் இருந்து கொண்டு, அவர்களுக்கிடையில் இருந்து வந்த இழுபறி, ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்புக் குறித்து ஏற்பட்ட அச்சம், அதனால் பலம் வாய்ந்த ஒரு தலைவரின் தேவை உணரப்பட்டமை, சிறுபான்மை இனத்துவக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்தமை மற்றும் ஆட்சியாளரை சிங்கள மக்களுத் தீர்மானிக்க முடியாமல் போகிறது – அதற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என சிங்கள மக்கள் எடுத்த தீர்மானம் போன்றவையும், சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு காரணங்களாக அமைந்திருந்தன.

இந்த சூழ்நிலையில்தான், சஜித் பிரேமதாஸவின் சாதி அடையாளம் என்பதும், ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோற்றுப்போவதற்கு முக்கியமானதொரு காரணமாக அமைந்திருந்தது” என்றார் கலாநிதி றமீஸ் அபூபக்கர்.   

மனைவி, மகன் சஜித் மற்றும் மகளுடன் – பிரேமதாஸ

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்