குப்பையுடன் வீசப்பட்ட 12 பவுன் நகை: கண்டெடுத்துக் கொடுத்த பிரதேச சபை பணியாளர்கள்: சம்மாந்துறையில் சம்பவம்

🕔 February 22, 2021

– எம்.எம். ஜபீர், ஐ.எல்.எம். நாசிம் –

ம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது, ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை, தேடிக் கண்டெடுக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்றமையினால் 12பவுண் தங்க நகையை தவறுதலாக குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார்.

அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், குறித்த வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய வேளையில்  காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இவ்விடயம் சம்மாந்துறை பிரதேச சபை திண்மக் கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் பணிபுரைக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தில், ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக் குப்பைப் பொதிகளும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராயப்பட்டது.

அப்போது குறித்த நபரின் 12 பவுண் தங்க நகை கண்டெடுக்கப்பட்டு, உரிய நபரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சம்பமாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்