ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு

🕔 February 11, 2021

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 04 வருடகாலம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தற்பொழுது உள்ள நிலைமையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைவாக முன்னர் அறிவிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை மேலும் நீடிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனுவை கவனத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிபதிகளான அர்ஜூன உபசேகர, சோகித்த ராஜகருண ஆகியோர் மத்தியில் இந்த மனு இன்று (11) ஆராயப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மனுதாரரின் சார்பில் ஆஜராகியுள்ளள ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா சுகயீனமுற்றிருப்பதால்வேறொரு தினத்தை வழங்குமாறு கோரினார்.

மனு தொடர்பில் மேலதிக விடயங்களை மார்ச் மாதம் 16 ஆம் திகதி ஆராய நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.

மரண தண்டனை விதிக்கப்படடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் 64 (ஊ) சரத்திற்கு அமைவாக நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு செல்வதற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்