இரண்டு தடவை உபவேந்தராக இருந்தவருக்கு, மீண்டும் அந்தப் பதவியை வழங்க முடியாது: பேராசிரியர் மஹநாம

🕔 February 10, 2021

– புதிது செய்தியாளர் –

ல்கலைக்கழகமொன்றில் இரண்டு தடவை உபவேந்தர் பதவியை வகித்த ஒருவருக்கு மீண்டும் அப்பதவியை வழங்க முடியாது என, இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரும், கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் பிரதீப மஹநாமஹேவா தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக உபவேந்தர் பதவியை வகித்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு தற்போது விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில் இவ்வாறான ஒருவருக்கு மீண்டும் உபவேந்தர் பதவி வழங்க முடியுமா என, பேராசிரியர் பிரதீப மஹநாமஹேவாவிடம் வினவியபோதே, அவர் மேற்கண்ட பதிலை வழங்கினார்.

“மூன்று வருடங்களைக் கொண்ட உபவேந்தர் பதவியை, ஒருவர் இரண்டு தடவை வகிக்க முடியும். அதன் பிறகு அவருக்கு வழங்க முடியாது. ஆனாலும், அவ்வாறு இரண்டு தடவை உபவேந்தர் பதவியை வகித்தவர் மீண்டும் உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று கூறப்படவில்லை என்பதால், அவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்றார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக கடந்த காலங்களில் பதவி வகித்த எஸ்.எம்.எம். இஸ்மாயில், பின்னர் அந்தப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அவர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர் மக்கள் காங்கிரஸ் சார்பில் அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இருந்தபோதும், அந்தப் பதவியை வழங்கிய அகில இலங்ககை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு துரோகமிழைத்து விட்டு, இஸ்மாயில் கட்சி மாறினார்.

இதன் பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட இஸ்மாயில், மீண்டும் தோல்வியடைந்தார்.

இது இவ்வாறிருக்க மேற்படி எஸ்.எம்.எம். இஸ்மாயில் உபவேந்தராக இருந்த காலப்பகுதியில் பாரிய ஊழல் மற்றும் மோசடிகளைப் புரிந்தார் என, அவருக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அதனை விசாரிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசாரணைக் குழுவொன்றினை நியமித்திருந்தது.

தேசியப்பட்டியல் உறுப்பினராக இவர் நாடாளுமன்றம் சென்றபோது, அப்போது உயர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த விஜேதாஸ ராஜபக்ஷ; ‘தனது பதவிக் காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளமை தனக்கு ஆச்சரியமளிப்பதாக’ சபையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்