கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு

🕔 December 21, 2020

கொரோனாவினால் இறந்தோரை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சு இறுதி முடிவெடுக்கும் வரையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை எரிக்காமல், பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவினால் மரணித்த 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவரின் குடும்பத்தவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்வில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முடிவு வெளிவரும் வரை, மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்படுவதைத் தடுக்குமாறு மரணித்தவரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், கொரோனாவினால் மரணித்த மேற்படி நபரின் உடலை காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலையிலுள்ள குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைக்க அனுமதிக்குமாறும் நீதிமன்றத்திடம் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்த பின்னர் மேற்படி உத்தரவை நீதவான் வழங்கினார்.

கொரோனாவினால் மரணத்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் வரை, கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்கப்படவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்