பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப்

🕔 December 22, 2020

அஸ்லம் எஸ்.மௌலானா –

கொவிட் தங்கி சிகிச்சை பெற்று வரும் பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“பாலமுனை வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவதனால் அவர்களது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடையும் எனவும், அதனால் இப்பிரதேச வாழ் மக்களுக்கு கொவிட்-19 பரவும் அபாயம் ஏற்படும் எனவும் அதனால் கொவிட் நோயாளிகளுக்கு இவ்வைத்தியசாலையில் சிகிச்சையளிப்பதை இடைநிறுத்துமாறு கோரி நேற்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் உள்ளிட்ட 05 பேர் இணைந்து வழக்குத் தாக்கல் செய்திருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்துள்ளது.

குற்றவியல் சட்டக்கோவை பிரிவு 96 – பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிகின்றேன்.

இப்பிராந்தியத்தில் மேற்படி சட்டத்தரணிகளை விட நான் ஒரு மூத்த சட்டத்தரணி என்ற ரீதியிலும் கடந்த காலங்களில் Environmental Foundation எனும் சுற்றாடல் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான சட்ட அலுவலராக பணியாற்றி, பல நீதிமன்றங்களில் சூழல், சுற்றாடல் தொடர்பான பொதுத் தொல்லை வழக்குகளில் ஆஜராகி, வாதாடியவன் என்ற அனுபவத்தின் அடிப்படையிலும் மேற்படி வழக்கு தொடர்பில் எனது மாறுபட்ட நிலைப்பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

அல்குர்ஆனில் எந்தவொரு உயிரற்ற சடலத்தையும் மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதேயொழிய அதனை தகனம் செய்ய வேண்டும் எனக்கூறப்படவில்லை. ஏதாவது வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்கள் மண்ணில் அடக்கம் செய்யப்படுவதனால் அது கொரோனாவை விட பயங்கரமான வைரஸாக இருந்தாலும் சரியே அதன் மூலம் நிலத்தடி நீர் ஒருபோதும் மாசடைய மாட்டாது.

நிலத்தடி நீர் மூலமாக இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு இருந்திருக்குமாயின் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை தகனம் செய்வதற்கு அன்று அல்குர்ஆன் அனுமதித்திருக்கும். ஆக மண்ணில் அடக்கம் செய்யப்படுகின்ற உடல்கள் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிலத்தடி நீர் மாசடையாது என்பதும் கிருமித்தொற்று பரவாது என்பதும் மிகத்தெளிவானது என்பதாலேயே இறை கட்டளை -அடக்கம் செய்யச் சொல்கிறது. அதுவே எமது நம்பிக்கையாகும்.

நீரை வடி கட்டுவதற்குக் சிறந்த வடிகட்டியாக மண் பயன்படுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வது என்பது அல்குர்ஆன் மீதான நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது.

அத்துடன் இதன் ஊடாக இனவாதிகளுக்கு மெல்வதற்கான அவல் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறான தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் எமது சமூகத்துக்கு ஏற்படப்போகின்ற பாரிய விளைவுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

சிலவேளை இந்த வழக்கில் நீதிமன்றமானது, குறித்த கழிவுகள் சுகாதாரத்திற்கு பங்கமானதுதான் என்று ஒரு வார்த்தை கூறி விட்டால், இந்த நாட்டில் தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில், சமூகத்துக்கு எழக்கூடிய அபாய விளைவுகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை இந்த வழக்காளிகள் முன்வைப்பார்களா?

ஆகையினால் யாராயினும் சரி, உண்மையில் சமூகத்தின் மீதான கரிசனை இருக்குமாயின் அவர்கள் இவ்வாறான வழக்குகளை தவிர்த்துக் கொள்வதே அறிவுடமையாகும்.

ஊருக்கு நல்லது செய்ய முனைகிறோம் என்ற சிந்தனையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆபத்தில் தள்ளிவிடுகின்ற இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறானவர்கள் தம்மால் சமூகத்திற்கு உதவ முடியா விட்டாலும் உபத்திரம் ஏற்படுத்தும் வகையில் நடந்து விடக்கூடாது என்பதே எனது வேண்டுகோளாகும்” என்றார்.

தொடர்பான செய்தி: பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கக் கூடாது: அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்