நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம்

🕔 December 6, 2020

நீதி அமைச்சினை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு உலக வர்த்தக மையத்துக்கு இடம்மாற்ற அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் குறித்த இரண்டு வருட காலப் பகுதிக்குமாக, 400 மில்லியன் (40 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கணக்கின் அடிப்படையில் மாதமொன்றுக்கு 160 மில்லியன் (1.6 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சுக்கான கட்டட நிர்மாண வேலைகள் நிறைவடையும் வரை, தற்காலிகமாக அந்த அமைச்சு இவ்வாறு இடம்மாற்றப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 20, 21, 22 மற்றும் 23ஆம் மாடிகளும், மேற்கு கோபுரத்தின் 22ஆம் மாடியும் நீதி அமைச்சுக்காக வாடகைக்குப் பெறப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்காக (24 மாதங்கள்) இவ்வாறு உலக வர்த்தக மையத்தில் நீதியமைச்சு வாடகை அடிப்படையில் தங்கியிருக்கும்.

இதேவேளை மேற்படி தளங்களை முன்பதிவு செய்வதற்கு 26 மில்லியன் ரூபாவும், அமைச்சு இடம்மாறும் போது தளபாட வசதிகளைச் செய்து கொள்வதற்கு 02 மில்லியன் ரூபாவும் செலவாகும் என, அமைச்சின் உள்ளகத் தகவல் கூறுவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சு இடமாறுவதால் அங்கு பணியாற்றும் 352 ஊழியர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவ்வாறு மிகப் பெரிய தொகை வாடகை கொடுக்கப்படுகின்றமை குறித்து – பல்வேறு விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்