முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘புரோக்கர்’ அரசியல்: சமூக வலைத்தளங்களில் கொப்பளிக்கும் கோபம்

🕔 November 17, 2020

– மரைக்கார் –

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக் கூடாது என்று, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன.

தற்போதைய ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை முஸ்லிம்கள் மத்தியில் விதைத்து, அதன் மூலம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு வந்துள்ளமையானது பெரும் மோசடி எனவும், சமூக வலைத்தளங்களில் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போவதாகவும், தனித்துவ அரசியல் செய்யப் போவதாகவும் தேர்தல் மேடைகளில் கூக்குரலிட்ட முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – தற்போதைய ஆட்சியாளர்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றமை அருவருக்கத்தக்க செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களை ஏமாற்றி, ராஜபக்ஷவினருக்கு எதிராக வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது – ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளமையானது ‘புரோக்கர்’ (தரகர்) அரசியலாகும் எனவும் சமூக வலைத்தளங்களில் ஆத்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் கடுமையான விமர்சனைங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஆட்சியில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் – எதுவித நிபந்தனைகளுமின்றி, முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியமை, அவர்களின் சொந்த நலன்களுக்காக மட்டும்தான் என்றும் மக்கள் விமர்சிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்