அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்: மஹிந்த இன்று சபையில் சமர்ப்பிப்பார்

🕔 November 17, 2020

ரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டம் நிதியமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக பிற்பகல் 1.40 மணிக்கு வரவு – செலவு திட்ட உரையை நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆரம்பிக்கவுள்ளார். இந்த வரவு – செலவு திட்டம் நாட்டின் 75 ஆவது வரவு – செலவு திட்டமாகும்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வர்த்தமானயில் வெளியிடப்பட்ட பின்னர் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நிதி அமைச்சரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைவாக அரசாங்கத்தின் செலவினத்துக்காக 2678 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும், இலங்கைக்குள் அல்லது அதற்கு அப்பால் 2900 பில்லியன் ரூபாக்கு வரையறுக்கப்பட்ட வகையில் கடனை பெற்றுக்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் வரவு – செலவு திட்ட விவாதம் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

வரவு – செலவு திட்டத்தின் மீதான விவாதம் 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வரவு – செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21ஆம் திகதி மாலை 05 மணிக்கு நடத்தப்படும்.

இதன் பின்னர் வரவு – செலவுதிட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதிவரை நடத்தப்படும். டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு 03ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

வரவு செலவு திட்ட உரையின் பின்னர் நிதியமைச்சரினால் சம்பிரதாய பூர்வமாக வழங்கப்படும் தேனீர் விருந்து இம்முறை இடம்பெறும். இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்டதாக இது இருக்கும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்