மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை, மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டு

🕔 November 8, 2020

– றிசாத் ஏ காதர் –

கொரோனா தொற்று தீவிரமாக பரவலடையும் இக்காலகட்டத்தில், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ள போது – திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களில் இருந்து – மட்டக்களப்பு மாவட்டத்துக்கு தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கியது யார் என, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து அதிகாரசபை முகாமையாளரிடம் கேள்வியெழுப்பியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் மிக முக்கியமானது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்துவது தொடர்பிலாகும். ஆனால் குறித்த தீர்மானங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தாமைக்கான காரணங்கள் என்ன? எனவும் அந்த சங்கத்தினர் வினவியுள்ளனர்.

“கொரோனா தொற்றானது மனிதர்களையே காவுகொள்கின்றது பஸ்களை அல்ல. ஆனால் திருகோணமலையில் இருந்து வருகின்ற பஸ்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அனுமதித்து பிறிதொரு பஸ்ஸில் அம்பாறை மாவட்டத்திற்குள் போக்குவரத்துக்கு அனுமதிக்கின்றனர். ஆனால் அம்பாரை மாவட்ட பஸ்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அனுமதிக்கவில்லை இதற்கான காரணங்கள் என்ன” எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதுவிடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து அதிகாரசபை முகாமையாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, அவ்வாறான ஒரு நடவடிக்கைக்கு தான் அனுமதிக்கவில்லை என்றார். ஆனால் இன்றுவரை திருகோணமலை மாவட்ட பஸ்களை அனுமதிப்பதன் மர்மம் தெரியாதுள்ளதாக தென்கிழக்கு தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

நாட்டில் எப்போது மாவாட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து இற்றைவரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பொலன்னறுவை திருகோணமலை வரை மாவட்டங்களுக்கிடையில் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டுவருகின்றன.

குறித்த அதிகாரசபையின் முகாமையாளரின் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அதிகமான சாரதிகளும், நடத்துனர்களுமாகும்.

நாட்டில் ஒரு சட்டம் அமுல்படுத்தப்படும்போது சில உயரதிகாரிகள் தங்களுக்கு ஏற்றால்போல் நடந்துகொள்வதானது மனிதர்களின் உயிர்களுடன் விளையாடுவதற்கு ஒப்பானது.

எனவே குறித்த விடயத்தில் ஆளுநர், மற்றும் அதிகாரசபையின் தலைவர் மற்றும் பொறுப்புமிக்க அதிகாரிகள் இதுவிடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தென்கிழக்கு கரையோர தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்