இருபதுக்கு ஆதரவளித்த 09 பேருக்கு, நாடாளுமன்றில் ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

🕔 October 29, 2020

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்கட்சியியைச் சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபையில் – ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு, எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகருக்கு கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டயானா கமகே, அ. அரவிந்த குமார், இஷாக் ரஹ்மான், பைஸல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக், நஸீர் அஹமட், ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் மற்றும் எம். முஷாரப் ஆகியோருக்கே இவ்வாறு ஆளுந்தரப்பில் ஆசனங்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் டயான கமகே மட்டுமே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராவார். ஏனையோரில் 06 பேர் கூட்டுக் கட்சிகளின் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களாவர்.

அதேவேளை எம். முஷாரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்திலும், ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் – முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களாவர்.

மேற்படி 09 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமது நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களாக கருதுவதில்லை என, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்